சென்னை: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணைமுதல்வராக பதவி ஏற்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், வரும் 19ந்தேதி நிறைந்த பவுர்ணமி இன்று உதயநிதி துணைமுதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக கோபாலபுர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து,   அடுத்தடுத்து திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள்  உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் கொளத்தூரில் கடந்த 5ந்தேதி (ஆகஸ்டு 5) மக்கள் திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் இதுகுறித்து செய்தியாளர்களை கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த  முதலமைச்சர் ஸ்டாலின்,   உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அது பழுக்கவில்லை என கூறியிருந்தார்.

இந்த நிலையில் வருகிற 19ஆம் தேதி  முழுநிலவு நாளான அன்று உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. (5 நாட்களுக்குள் உதயநிதி ஸ்டாலின்  பழுத்துவிட்டாரோ)

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில்  வருகிற 27ஆம் தேதிஅமெரிக்கா செல்லவுள்ளார்.  அவருடன் தொழில்துறை அமைச்சர் , அதிகாரிகள் உள்பட ஒரு குழுவே அமெரிக்கா செல்கிறது. இந்த குழுவினருடன் முதலமைச்சரின் மனைவி துர்கா உள்பட குடும்பத்தினர் சிலரும் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்பட இருப்பதாகவும் அப்போது தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும்  கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக மாநில முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது, அவரது பொறுப்புகள் மூத்த அமைச்சர் ஒருவரிடம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை, 15 நாள் பயணமாக வெளிநாடு செல்லும் முதல்வர் தனது மகனான விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கி, தனது பொறுப்பை தற்காலிகமாக வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

 இதை உறுதிபடுத்தும் அமைச்சர் கண்ணப்பன்  நேற்று (ஆகஸ்டு 9ந்தேதி)  நடைபெற்ற  தமிழ் புதல்வன் திட்ட தொடக்க நிகழ்வில் பேசும்போது, வெட்டவெளிச்சமாக பேசியுள்ளார்.

உதயநிதியை வருகிற 19ஆம் தேதிக்கு பிறகு துணை முதலமைச்சர் என்று அழைக்கனும் என கூறி வாரிசு அரிசியல் உண்மையாகி இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

 கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுகவிடம் ஆட்சி அதிகாரத்தை இழந்த திமுக, அடுத்து சுமார்  10  ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரம் முக்கிய காரணம் என தனது ஆதரவாளர்களால் கூறப்பட்டு, அவருக்கு பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதற்காகத்தான், கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்ததும், உதயநிதிக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்ற நிலையில், அவருக்கு பதவி வழங்கப்படாது என கூறி வந்த நிலையில், கட்சியினரின் வேண்டுகோளை எற்ற  அவருக்கு மந்திரி பதவி வழங்குவதராக அறிவித்து, விளையாட்டுத்துறை அமைச்சராக்கி கவுரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிலையில், தற்போது தனது வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு, உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி வழங்கி அழகு பார்க்க முடிவு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அமைச்சர் உதயநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருந்த பல நிகழ்ச்சிகளில் அவருக்கு பதிலாக உதயநிதியே கலந்துகொண்டு தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலின் கடந்தசில ஆண்டுகளுக்கு கோவையில் நடைபெற்ற  தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாம் விழாவில் பேசும்போது ,  ‘அரசியலில் வருவதற்காகத்தான் சினிமாவுக்குள் வந்தீர்களா?’ என செய்தியாளர்கள்  கேட்ட போது, `அரசியலில் எனக்கு ஆர்வமில்லை. கட்சியிலிருந்து கொண்டுதான் அரசியல் செய்ய வேண்டும் என இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்றார். ஸ்டாலினும் தன்னுடைய குடும்பத்திலிருந்து அரசியலுக்கு யாரும் வர மாட்டார்கள் என்றார்.

பின்னர்  தேர்தல் நேரத்திலேயே உதயநிதி போட்டியிடப் போவதில்லை என்றார்கள். ஓர் அனுபவத்துக்காக நேர்காணலில் கலந்து கொள்கிறார் என்றார்கள். ஆனாலும் இப்போது எல்லாம் அதற்கு நேர் எதிராகச் சென்று கொண்டிருக்கிறது” எனப் பழைய விஷயங்களை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

தற்போது“உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டும்” எனத் தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சர்கள் குரல் கொடுத்து வரும் சூழலில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்பது உறுதியாகி  உள்ளது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருந்துக் கொண்டேதான் இருப்பார்கள் என்பது தமிழக மக்களுக்கு 100 சதவிகிதம் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.

துணைமுதலமைச்சர் பதவி குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின்…

துணை முதலமைச்சராகிறாரா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….?