திருச்சி: திருச்சியில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளிடையே போதைபொருட்கள், மொபைல்போன்கள் சரளமாக பயன்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், அவ்வப்போது சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிபன்றன. இந்த நிலையில், கேரளாவில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள், நேற்று 9 பேரை கைது செய்து அழைத்துச்சென்றுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன்,  திருச்சி மத்திய சிறை வளாகம் போதை கும்பலின் கூடாரமாக மாறுகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் மற்றும் போலி பாஸ்போர்ட் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் என 1500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு தண்டனை காலம் முடிந்தும், வெளியே விடாமல் அங்கேயே அடைத்து வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இலங்கை உள்பட பல வெளிநாட்டு கைதிகள். போதைப்பொருள் கடத்தல் கைதிகள், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள வெளிநாட்டு கைதிகளும் உள்ளனர். இவர்களிடையே போதைப்பொருட்களும், செல்போன்களும் தாராளமாக நடமாடுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதை சிறை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்றும், மீறி நடவடிக்கை எடுத்தால், சிறை அதிகாரிகளின் குடும்பத்தையே ஒழித்துவிடுவோம் என்று மிரட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளிலும் அவ்வப்போது காவல்துறை, சிபிஐ, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான செல்போன்கள் பறிமுதல் செயப்பட்டது. மேலும்,  அங்கு அடைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த குண சேகரன் என்பவரிடம் நடத்திய விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து,  கேரளா மாநிலம் விழிஞ்சியம் அரபிக்கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த 6 பேர் வந்த மீன்பிடி படகில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 1,000 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, நேற்று மீண்டும்  திருச்சி சிறப்பு முகாமில் சோதனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து,  இலங்கையை சேர்ந்த குணசேகரன், புஷ்பராஜ், உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர். சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.