சென்னை: கருணாநிதி மரணத்தில் மர்மம் உள்ளதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக முக்கிய நிர்வாகிக்கு சொந்தமான சென்னை மந்தைவெளி காவேரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழந்த விவகாரத்தில், மர்மம் இருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

மேலும்,  கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார் அவரை எதிர்த்து அதிமுகவின் சைதை துரைசாமி களம் கண்டார். அந்த தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றதை அடுத்து, அந்த வெற்றிக்கு எதிராக சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் சூழல் மாறினால் ஸ்டாலின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள முதல்வர்,  அமைச்சர்  துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ஆனால்,  கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் தான் துரைக்கண்ணுவும் அனுமதிக்கப்பட்டிருந்தார், அப்படியென்றால் கருணாநிதி இறப்பிலும் மர்மம் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா இறப்பில் கூட அரசியல் பார்க்கிறார் ஸ்டாலின்  என முதலமைச்சர் காட்டமாக விளாசியுள்ளார்.