டெல்லி: மாநிலங்களின் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும், ஒரு கோடி ‘டோஸ்’ தடுப்பூசி ஸ்டாக் இருப்பதாகவும்  மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்து உள்ளது.  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஒரு கோடி, ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா உள்பட  சில மாநிலங்களில் , கொரோனா தடுப்பூசி மருந்து தீர்ந்து விட்டதாகவும், இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர், தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருவதாகவும் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில் கூறியிருப்பதாவது,

மகாராஷ்டிரா  மாநிலத்திற்கு, ஏப்ரல்  28ந்தேதி  வரை,  ஒரு கோடியே 58 லட்சத்து, 62 ஆயிரத்து, 470 டோஸ் தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டுள்ளது. அதில், 0.22 சதவீதம் மருந்து வீணாகி உள்ளது. இத்துடன் 1 கோடியே, 53 லட்சத்து, 56 ஆயிரத்து, 151 டோஸ் மருந்து இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதம், 5 லட்சத்து, 6,319 டோஸ் மருந்து கையிருப்பில் உள்ளது. அதனால், தடுப்பூசி செலுத்தும் பணியை தடையின்றி மேற்கொள்ளலாம். அடுத்த மூன்று நாட்களில், மேலும், ஐந்து லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து மகாராஷ்டிராவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு, இதுவரை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 15 கோடியே, 95 லட்சத்து, 96 ஆயிரத்து, 140 டோஸ் தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்கிஉள்ளது. இதில், வீணானது உட்பட, 14 கோடியே, 89 லட்சத்து, 76 ஆயிரத்து, 248 டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம், தற்போதைய நிலையில், 1,6,19,892  டோஸ் தடுப்பூசி மருந்து கையிருப்பு உள்ளது. அடுத்த மூன்று நாட்களில், மேலும், 57 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி மருந்து, மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.