கோவை: கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் வேன் ஒன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே கோவை பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கார் வெடிகுண்டு சம்பவம் மக்கள் மனதில் இருந்து அகலாத நிலையில், வெடிபொருட்களுடன் வேன் சிக்கி இருப்பது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. கோவையிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இந்த நிலையில்,  சுமார் 2000 கிலோ  வெடிபொருட்கள் நிரம்பிய வேன் கோவை புறநகர் பகுதியில் சிக்கி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்துகளை வேனில்  கடத்திச் சென்ற  நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த  பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர்  அந்த வேனை இன்று காலை (செவ்வாய்க்கிழமை/ ஆகஸ்டு 26) மடக்கி பிடித்து, வேன் மற்றும் அதை ஓட்டி வந்த ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கோவை மாவட்டத்தில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும், தமிழக அரசு சார்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் இருந்து வேன் மூலம் கேரளத்துக்கு ஜெலட்டின் வெடிபொருள் கடத்தப்படுவதாக இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெலட்டின் கடத்திச் செல்லும் வேனைப் பிடிக்க அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இறங்கினர்.

இன்று அதிகாலை 4 மணியளவில்  கோவை புறநகர் பகுதியில் உள்ள பைபாஸ் சாலை வழியாக கேரளத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சென்ற வேனை மதுக்கரை அருகே பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். வேனில் சோதனை செய்ததில் ஜெலட்டின் குச்சிகள் பெட்டி பெட்டியாக இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இவற்றின் மொத்த எடை 2 ஆயிரம் கிலோ இருக்கும் என முதல்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கடத்தப்பட்ட வேனை மதுக்கரை காவல் நிலையத்துக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கொண்டு சென்றனர். வேனை ஒட்டிச் சென்ற ஓட்டுநர் சுபேரையும் கைது செய்து மதுக்கரை காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளத்தில் உள்ள கல்குவாரிக்கு மலைகளை உடைக்க பயன்படுத்துவதற்காக ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கொண்டு செல்லப்பட்டதாக ஓட்டுநர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு திட்டமிட்டு, அதரற்காக  இந்த வெடிபொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.