சென்னை: சசிகலா விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்று பேனர் வைத்த நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணிய ராஜா 27ம் தேதியே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி அண்ணாதுரை என்பவர் சசிகலாவுக்கு போஸ்டர் அடித்து ஒட்டினார். அவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவிற்கு களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சசிகலாக்கு ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் சமூக வலைத்தளத்தில் பூங்கொத்து படத்துடன் வாழ்த்து தெரிவித்து ஆதரவு கொடுத்துள்ளார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பங்காளி சண்டை முடிந்து இணைந்து விடுவோம் என்று கருத்து தெரிவித்துள்ளார். கோகுல இந்திரா சின்னம்மா என வரவேற்றுள்ளார்.
இந் நிலையில், சசிகலா விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி கட்சியின் உயர் பொறுப்புகளில் வகிப்பவர்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சசிகலாவை பல்வேறு வகையில் ஆதரித்த கட்சியின் அமைச்சர், துணை முதல்வர் மகன் உள்ளிட்டவர்களை விட்டுவிட்டு எம்ஜிஆரின் உண்மை தொண்டர்களை நடவடிக்கை என்ற பெயரில் நீக்குவது எப்படி? தலைவர்களுக்கு ஒரு நியாயம், தொண்டர்களுக்கு ஒரு நியாயமா? என்றும் அவர்கள் கொந்தளித்துள்ளனர்.