இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு, வங்கதேச நாணயமான டாக்காவை விட மிகவும் குறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவுகளை மேற்கொண்டு வருவது வைரலாகி வருகிறது.

கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வங்கதேச நாணயமான டாக்காவை விட, இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளதாக நூற்றுக்கணக்கில் பதிவுகளும், படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடியை பலரும் குற்றம்சாட்டியும் வருகின்றனர். அதேநேரம், சிலர் இரு நாட்டு நாணயங்களுக்கான வரைகலை படங்களையும் ஒப்பிட்டு, பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்று பிபிசியின் உண்மை சரிபார்க்கும் குழு தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச பங்கு சந்தைகளில் இருந்து கிடைக்கும் நிதி தகவல்களை தரும் நிதி இணையதளங்களின் படி,

1 இந்திய ரூபாய் = 1.18 டாக்கா நாணயம்

1 வங்கதேச டாக்கா நாணயம் = 0.82 பைசா

10 ரூபாய் இந்திய காசுகள் = 11.80 வங்கதேச டாக்கா நாணயம்

இவ்வாறு தகவல்கள் உள்ளன.

இரு நாட்டு நாணயங்களின் பரிமாற்ற விகிதம் தொடர்பான படங்களை சமூக வலைதளவாசிகள் பதிவிட்டாலும், ஒரு டாக்கா நாணயத்திற்கு 0.84 ரூபாய் தான் இந்திய மதிப்பு என்பதை தவறாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டதாகவே சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

வங்கதேச தலைநகரான டாக்கா மற்றும் சிட்டகாங் பங்குச்சந்தையின் திங்கட்கிழமை நிலவரப்படி, ஒரு டாலருக்கு நிகரான டாக்கா நாணயத்தின் மதிப்பு 84.60 என்று இருந்துள்ளது. ஆனால் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியில் இந்திய மதிப்பு படி ஒரு டாலர் ரூ. 71.70-ஆக இருந்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு நிகரான வங்கதேச நாணயத்தோடு, இந்திய நாணயத்தை ஒப்பிடுகையில், இந்திய நாணயத்தின் மதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. அதாவது குறைந்த ரூபாயில் ஒரு டாலரை பெற்றுவிட முடியும். கடந்த 90 நாட்களில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ. 72.08 வரை சென்றுள்ளது. ஆனால் வங்கதேச நாணயத்தின் மதிப்பு ஒரு டாலருக்கு 84.77 டாக்கா வரை மட்டுமே சென்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், டாலரோடு இரு நாட்டு நாணயங்களின் மதிப்புகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தால், இந்திய ரூபாயின் குறைந்தபட்ச மதிப்பு ரூ. 43.92 ஆகும். ஆனால் வங்கதேச டாக்கா நாணய மதிப்பு 68.24 டாக்கா ஆகும். இதன் மூலம், கடந்த 10 ஆண்டு கால பொருளாதார நடவடிக்கைகளின் போது, டாலரோடு ஒப்பிடுகையில், இந்திய ரூபாயை விட, வங்கதேச நாணயம் அதிக ஸ்திரதன்மையை அடைந்துள்ளது.

நன்றி: BBC Tamil (செய்தி மற்றும் புகைப்பட உதவி)