நெல்லை:

நெல்லை மாநகராட்சியின் திமுகவை சேர்ந்த முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரியின் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 7 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவருடன் உமா மகேஸ்வரி

திமுகவை சேர்ந்த முன்னாள் நெல்லை மேயரான உமாமகேஸ்வரியின் வீடு  பாளையங்கோட்டை அருகே  ரோஸ் நகரில் உள்ளது. இது ரெட்டியார்பட்டியை சேர்ந்த பகுதி. இவர், அவரது கணவர், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

கொலை நடந்த அன்று, பணிப்பெண் மாரி மதிய உணவுக்கு வீட்டுக்கு வராததால், அவரைத்தேடி அவரது அம்மா உமா மகேசுவரியின் வீட்டுக்கு வந்தபோதுதான், இந்த கொலை விவரம் தெரிய வந்தது. உமா மகேஸ்வரியின் கணவர் முருகசங்கரன், உமா மகேசுவரி ஆகியோர் மார்பு மற்றும் முதுகில் கத்தியால் குத்தப்பட்டும், மாரி தலையில் இரும்பு கம்பியால் அடித்தும் கொல்லப்பட்டு கிடந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர்,  தொடக்கத்தில்,  நகைகளுக்காக நடந்த கொலைகள் போலவே தெரிகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக கொலை நடந்ததா? என்பது குறித்தும் விசாரித்து வருவதாக கூறினர்.

ஆனால், வீட்டின் பின்பக்க வாசலில் கிடைத்த சில கைரேகைகளையும், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.  இதையடுத்து, கொலையாளிகள், மேயர் குடும்பத்திற்கு தெரிந்த நபர்களாகவே இருந்திருக்கக் கூடும்.  சம்பவம் நடைபெற்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற  தடயங்களில், வீட்டுக்கு வந்த சிலரை உமா மகேஸ்வரி உட்கார வைத்து பேசியிருக்கின்றார்;  வந்த நபர்களுக்கு குடிக்க  தண்ணீர் கொடுக்கப்பட்டிருக் கின்றது. அதன் பின்னரே கொலை சம்பவம் நடைபெற்றது போல உள்ளது என்றும், இந்தக் கொலையில் பெண் உள்பட சில ஆண்களும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போன் எண்ணை வைத்து டிரேஸ் செய்யப்பட்டதில், கொலை நடைபெற்ற சமயத்தில் அந்த குறிப்பிட்ட பெண்ணின் போன் எண் நெல்லையில் இருந்துள்ளதும், தற்போது மதுரையில் இருப்பதும் தெரிய வந்துள்ளதால், சந்தேகத்திற்கிடமான அந்த பெண்ணை விசாரிக்க காவல்துறை தனிப்படை மதுரைக்கு விரைந்து உள்ளது.

இதற்கிடையில், உமா மகேஸ்வரி கொலை நடந்த சமயத்தில், வீட்டின் அருகே சுற்றிய இருவரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொலை தொடர்பாக ஏற்கனவே 3 பெண்கள் உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.  தற்போது, மதுரையைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் சீட் பெற ஆசைப்பட்டு, உமா மகேஸ்வரியிடம் பணம் கொடுத்ததாகவும், ஆனால் சீட் கிடைக்காத பட்சத்தில் பணத்தை அவர் திருப்பி தர மறுத்ததால், ஆத்திரத்தில் கொலை நடந்ததா  என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.