100 நாட் அவுட் என்று தனது இன்னிங்ஸை தொடர்ந்து கொண்டிருக்கிறது பெட்ரோல் விலை.
நாளொரு நடிப்பு தினம் ஒரு திசை திருப்பல் மூலம் சாமானிய மக்களை வஞ்சித்து வரும் பா.ஜ.க. அரசு கடந்த ஏழாண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளை கூறாமல் அதை திசை திருப்பும் முயற்சியில் முழுமூச்சில் ஈடுபட்டு வருகிறது.
பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றின் விலை ஏற்றத்துக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கிய கடன் பத்திரங்கள் தான் காரணம் என்று கடந்த சில தினங்களாக வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.
இதுகுறித்த உண்மை நிலையை ஆர்வலர்கள் சிலர் பதிவிட்டுவருகிறார்கள். அதில் கூறியிருப்பதாவது :
சர்வதேச சந்தையில் 2020 ஜூன் மாதம் பேரல் ஒன்றுக்கு 40.63 $ ராக இருந்த கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டு ஜூன் 16 ம் தேதி 73.18 $ ராக உயர்ந்திருக்கிறது, இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட இதுமட்டுமே காரணமா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.
2009 – 10 ம் நிதியாண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு கடன் பத்திரங்களை காங்கிரஸ் அரசு வழங்கியது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்திற்கு ஈடாக இந்த கடன் பத்திரங்களை வழங்கியது.
அரசின் நலதிட்டங்களுக்கு தேவையான நிதி இல்லாத போது திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு உத்தரவாத பத்திரங்கள் வழங்குவது என்பது அரசின் நடைமுறை, இந்த உத்தரவாத கடன் பத்திரங்களை அதில் குறிப்பிட்டுள்ள முதிர்வு காலத்தில் பணமாக பெற்றுக்கொள்ளலாம், அதுவரை அந்த கடன்தொகைக்கான வட்டி ஒவ்வொரு ஆண்டும் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
2018 ம் ஆண்டு ராஜ்ய சபாவில் தாக்கல் செய்த அறிக்கையின் படி எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு வழங்கிய கடன் பத்திரங்களின் நிலுவை தொகை ரூ. 1.30 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் படி 31-மார்ச்-2021 முடிய ரூ. 1,30,923 கோடி நிலுவையில் உள்ளது, அதாவது கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த தொகை அப்படியே உள்ளது.
2014 ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவில் 1,34,423 கோடி ரூபாயாக இருந்த நிலுவை தொகை தற்போது வரை எந்தவித பெரிய மாற்றமும் இன்றி கட்டிகாத்துவருகிறது மோடி அரசு.
2015 ம் ஆண்டு இரண்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு தலா ரூ. 1750 கோடி கடனை திருப்பி செலுத்திய மத்திய அரசு, அதற்கு பின் இந்த ஆறு ஆண்டுகளில் எண்ணெய் நிறுவனங்களுக்கான கடனை திருப்பி செலுத்தவில்லை அல்லது கடன் பத்திரங்கள் எதுவும் இந்த காலகட்டத்தில் முதிர்ச்சி அடையவில்லை என்று தெரிகிறது.
2015 – 16 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை கடன் நிலுவை தொகை ரூ. 1,30,923 ஆக எந்த வித மாற்றமும் இன்றி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 9989.96 கோடி ரூபாய் வட்டியாக வழங்கி வருவதாக 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜ்ய சபாவில் வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 – 22 நிதியாண்டில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தலா 5000 கோடி ரூபாயாக மொத்தம் ரூ. 10,000 கோடி கடனை திருப்பி அளிக்கவேண்டியுள்ளது, அதன்மூலம், நிலுவை தொகை 1,30,923 ல் இருந்து குறைவதுடன் இதற்கான ஆண்டுவட்டியும் 9500 கோடி ரூபாயாக குறையவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான தொகையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வட்டியாகவும் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை அசலையும் திருப்பி செலுத்தி வரும் நிலையில், அரசின் வருவாய் நிலையானதாக இருக்கிறதா என்று பார்த்தால் அது, ஆண்டுக்கு ஆண்டு சூழலுக்கு சூழல் மாறிக்கொண்டே வருகிறது, மேலும் கணிசமான அளவு வருவாய் உயர்ந்திருக்கிறதே தவிர குறைந்ததாக தெரியவில்லை.
கடந்த 2020 ஏப்ரல் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 22.98 ஆகவும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 18.83 ஆகவும் இருந்த கலால் வரி 2021 பிப்ரவரி 2 ம் தேதி முறையே ரூ.32.90 மற்றும் ரூ. 31.80 ஆக உயர்ந்திருந்தது, 2014 ம் ஆண்டு இதே கலால் வரி முறையே ரூ. 10.38 மற்றும் ரூ. 4.52 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலுக்கு நிகராக டீசல் விலை உயர மத்திய அரசின் இந்த வரி உயர்வே காரணம்.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதிவியேற்ற 2014-15 ம் நிதியாண்டில் கலால் வரியாக மொத்தம் ரூ. 99,018 கோடி வசூலான நிலையில் 2019 – 20 நிதியாண்டில் ரூ. 2,23,057 கோடியும் 2020 – 21 ம் நிதியாண்டில் சுமார் ரூ. 3,00,000 கோடியும் வசூலானது.
மேலும், 2021 – 22 ம் நிதியாண்டுக்கு 3,00,000 கோடி ரூபாயை இலக்காக நிர்ணயித்திருப்பது அதன் திட்ட அறிக்கைகள் மூலம் புலப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கான வருவாய் உயர்ந்துகொண்டே இருக்க, கடன் பத்திரங்கள் என்ற பாதுகாப்பு அரணை கொண்டு நிலையான தொகையை மட்டுமே அவற்றுக்கு செலுத்தி வருகிறது.
சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு நேரடி மானியம் என்ற பெயரில் எவ்வளவு ரூபாய் வழங்கப்படுகிறது என்பது ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் அத்துப்படியாக உள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் அரசு வழங்கிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கான கடன் பாத்திரங்களே காரணம் என்று திசை திரும்புவதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிந்திருக்கின்றனர்.