கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் அணியின் பட்லரை மேன்கடிங் முறையில் அவுட் செய்தார்.
அஸ்வினின் இந்த செயல் விளையாட்டு விதிமுறைக்கு மாறானதல்ல என்றாலும், அது, ஆட்சேபத்தையும் ஆதரவையும் ஒருசேர பெற்றது. இந்த செயலுக்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இச்செயல் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்றெல்லாம் கருத்து கூறினார்.
விளையாட்டு விதிமுறையின்படியான ஒரு செயலை, இப்படி விமர்சிக்கும் ரிக்கிப் பாண்டிங்கின் கிரிக்கெட் வரலாறு எப்படியானது? மற்றும் அவரது ஆஸ்திரேலிய அணியின் தன்மை எப்படியானது என்பதைய‍ெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஸ்லெட்ஜிங் செய்வதை ஒரு விளையாட்டுக் கலாச்சாரமாகவே பின்பற்றி வருபவர்கள் ஆஸ்திரேலிய அணியினர். இந்த கலாச்சாரத்தில் ரிக்கிப் பாண்டிங்கும் ஊறி திளைத்தவர்.
சில காலங்களுக்கு முன்னால், பந்தை சேதப்படுத்திய குற்றத்தில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித்தும், வார்னரும் சிக்கியதை நாம் அறிவோம்.
ரிக்கிப் பாண்டிங்கைப் பொறுத்தவரை, தான் அவுட் என்று தனக்கு உறுதியாக தெரிந்தாலும்கூட, அம்பயர் அவுட் கொடுத்தால்தான் மைதானத்தை விட்டு செல்வேன் என்று வெளிப்படையாக கூறியவர்.
ஒருமுறை, இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டியின்போது, இந்திய வீரர் அடித்தப் பந்து தரையில் பட்டு, பின்னர் ஆஸ்திரேலிய ஃபீல்டர் ஒருவரிடம் கேட்சானது. சம்பந்தப்பட்ட இந்திய வீரருக்கும், அம்பயருக்கும் அது அவுட்தானா? என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால், அப்போது அம்பயர் ஒரு மோசமான காரியத்தை செய்தார். மூன்றாவது நடுவரிடம் விஷயத்தைக் கொண்டு செல்லாமல், எதிரணி கேப்டன் & ஸ்லெட்ஜிங் மன்னன் ரிக்கிப் பாண்டிங்கிடம் அந்த அவுட் குறித்து விளக்கம் கேட்டு, ஒரு மாபெரும் முன்னுதாரண(!) செயலை செய்தார்.
அப்போது, விளையாட்டு ஸ்பிரிட்(!) கொண்ட ரிக்கிப் பாண்டிங், அவுட் என்று விரலை உயர்த்த, அம்பயரும் அதை ஆமோதித்து அவுட் கொடுத்தார்.
இப்படியான வரலாற்றைக் கொண்ட ரிக்கிப் பாண்டிங்தான், மேன்கடிங் முறையில், விளையாட்டு விதியைப் பின்பற்றி அஸ்வின் அவுட் செய்ததை, விளையாட்டு ஸ்பிரிட் இல்லாத செயல் என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்.
தற்போது, அஸ்வின் இடம்பெற்றிருக்கும் டெல்லி அணியின் பயிற்சியாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.