சென்னை,
ரஜினி வரும் ஏப்ரல் 2ந்தேதி அவரது ரசிகர்களை சந்திக்கிறார். இதன் காரணமாக தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையை சேர்ந்த பிரபல பட நிறுவனமான லைக்கா, கொழும்பில் இலங்கை தமிழர்களுக்காக வீடுகள் கட்டியுள்ளது. இந்த வீடுகளின் சாவிகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் இலங்கை செல்வதாக இருந்தது.
அவரது இலங்கை செல்லும் முடிவுக்கு திருமாவளவன், வேல்முருகன், வைகோ போன்ற அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ரஜினியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், ரஜினியின் பயணம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்த திருமாவளவன், வேல்முருகனை கண்டித்து கொழும்பில் ரஜினி ஆதரவு ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நல்லதையே நினைப்போம்…நல்லதே நடக்கும்…நேரம் கூடி வரும்போது சந்திப்போம்! என்றும் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 2ந்தேதி ரஜினி ரசிகர்களை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, தனது அரசியல் பிரவேசம் பற்றி ஒரு நல்ல முடிவு எடுப்பேன் என்று பட்டும்படாமலும் போக்கு காட்டி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
ஒவ்வொரு பட வெளியீட்டின்போது, இதுபோன்ற பரபரப்புகளை ஏற்படுத்தி, தனது படத்துக்கான வெற்றியை தக்க வைத்துக்கொள்வதில் ரஜினி எப்போதுமே சூப்பர்ஸ்டார்.
அதுபோல தற்போது, அதிக பொருட்செலவில் ரஜினி நடித்து 2.0. ஓ பட விளம்பரத்திற்காகவே இதுபோன்ற ஸ்டண்டுகளை வெளியிட்டு வருகிறார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், பாரதியஜனதா கட்சியினரோ, ரஜினி பாரதியஜனதாவில் சேருவது குறித்து அறிவிப்பார் என்றும், அவரது அறிவிப்பு ஆர்.கே.நகர் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறி வருகின்றனர்…
ரஜினியின் அறிவிப்பு… எப்போதும்போல புஸ்வானமாகப் போகிறதா…. அல்லது வெடிகுண்டாக வெடிக்கப்பகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.