ராமதாசின் சுயநல அரசியலில் பலியானது வன்னியரா? அந்நியரா?

சிறப்புக்கட்டுரை:  எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

ஜூலை மாதம் 16 – ஆம் நாள் 1989, வன்னியர் சங்கத்தை தலைமை ஏற்று நடத்தி வந்த ராமதாஸ் அவர்கள், பாட்டாளி உழைக்கும் வர்கத்திற்காகவும் தமது வன்னிய இனத்திற்கான முன்னேற்றத்திற்காகவும் அரசியில் இயக்கம் காண்பதாக பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினர். அதிகாரத்தில் உள்ளோர், தமது இனத்திற்கான நியாயமான அரசியல் அதிகாரப்பகிர்வை தரவில்லை என்றும், அரச பணிகளில் தங்களுக்குரிய பங்கு கிடைக்க வில்லை என்றும் கூறி தமது இனத்தை ஒருங்கிணைத்தார். அது அரசியல் அதிகாரத்தை நோக்கிய பயணமாக கட்டமைத்தார்.

உண்மையில், டிசம்பர் மாதம் 24 -ஆம் நாள், 1987 -ல் ஆண்டு புரட்சி தலைவர் எம்ஜியார் மறைவுக்கு பின்னாக அரசியலில் ஓர் வெற்றிடம் உருவானதாக நினைத்து அந்த வெற்றிடத்தை நோக்கிய பயணமாக தொடங்கிய இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி. ஆகவே, இன்றைய அரசியல் வெற்றிடம்  நோக்கிய பயணிப்போரின் முன்னோடி ராமதாஸ் அவர்கள் என்றால் அது மிகை ஆகாது.

ஆரம்ப காலங்களில், அவர் பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து சமுதாயத்திற்கான காட்சியாகத்தான் கட்டமைக்க எண்ணினார். அதே காலகட்டத்தில், தென் தமிழகத்தில் தீவிரமாக வளர்ந்து கொண்டிருந்த தலித் தலைவரான திருமாவளவனை, வட தமிழகத்திற்கு அழைத்து வந்தார். ஒரே மேடையில் தோன்றி, வன்னிய மற்றும் தலித் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி அதன் மூலமாக அரசியில் வெற்றி கண்டு அதிகாரத்திற்கு வர எண்ணினார். ஆனால், அவருடைய வன்னிய சங்க தலைமையின் போது விதைத்த சாதிய வன்மமானது, தலித் வன்னிய ஒற்றுமையை ஏற்கவில்லை. அதனால், அவருடைய அரசியல் கணக்குகள் பலிக்கவில்லை. அவருடைய, தமிழகத்தின் முதல் தலித்முதல்வர் என்ற கோஷமும் எடு படவில்லை. அதை மெல்ல உணர்ந்த ராமதாஸ், அந்த கோஷத்தையும், கொள்கையையும் காற்றில் கரைத்து எதார்த்த அரசியலுக்கு வந்தார். அவர் அழைத்து வந்த திருமா வளவனின் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்துடன் பகைமை பாராட்டினார். அது, வட தமிழக கிராமங்கள் தோறும் வன்முறைக்கும், தீராத பகைக்கும் அக்காலகட்டத்தில் வித்திட்டது. அந்த அரசியல் மற்றும் சமுதாய பகை இன்றளவும் தொடர்கின்றது. அது, தேர்தல் காலங்களில் வன்முறை வெறியாட்டங்களாய் வெடித்தது.. வெடித்துக் கொண்டிருக்கிறது.  தற்போதைய கலவரங்களும் அதன் தொடர்ச்சியே…

தமது அரசியல் எதிர்காலமே, வன்னிய சமுதாய ஓட்டு வங்கியோடு பின்னி பிணைந்தது என்பதை நன்கு உணர்ந்த ராமதாஸ், தம்மை தவிர தமது சமூகத்தில் வேறு எந்த வன்னிய தலைவரும்  உருவாகாமல் பார்த்துக்கொண்டார். தம்மோடு வன்னிய சங்கத்தில் பயணித்த தலைவர்களான எ.கே.நடராஜன், சி.ன். ராமமூர்த்தி, வேல்முருகன் போன்றோரை திட்டமிட்டு வன்முறையால் ஓரம் கட்டினார்.

ராமதாஸ் அவர்கள் சமுதாய பணிக்கு வருவதற்கு முன்பே   கோபால் நாயக்கர், செங்கல்வராய நாயக்கர், சென்னியப்ப நாயக்கர், மாணிக்க வேல் நாயக்கர், ராமசாமி படையாட்சி, கோவிந்தசாமி கச்சவராயர் போன்ற பெரும் தலைவர்கள் வன்னிய சமுதாயத்திற்காக தமது உழைப்பையும், பொருளையும் கொடுத்து, தமது சமுதாயம் மற்றும் ஏனைய சமுதாயத்திற்கும் அழியா கல்வி கொடை கொடுத்து சென்றுள்ளார்கள். இவை அனைத்திற்குமான தனிப்பெரும் தலைமையாக தன்னை முன்னிலை படுத்திக்கொள்கிறார் ராமதாஸ்.

கலைஞர் அவர்கள் வழங்கிய இடஒதுக்கீட்டை தனது தனிப்பெரும் சாதனையாக விளம்பரப்படுத்துகிறார். ஆனால், பலருக்கும் தெரியாதது, ஒன்றரை லட்ச வழக்குகள், நாற்பதாயிரம் கைதுகள், 21  உயிர் பலியின் விளைவாக கிடைத்த பயன் இட ஒதுக்கீடு அதுவென்று. நிலுவையில் இருந்த வழக்குகளாலும், கைதுகளாலும் வன்னிய இளைஞர்கள் இழந்தது அளப்பரியது. ஆனால், அந்த தியாகத்தின் அடித்தளத்தில் இருந்து தமது அரசியல் கனவை தொடங்கினர் ராமதாஸ்.

தமிழகத்தின் அனைத்து சமுதாயத்திற்கான இயக்கமாக துவங்கிய பாட்டாளி மக்கள் கட்சி தனது சாதிக்கான இயக்கமாக மாறி, பின் அன்புமணி அரசியல் பிரவேசத்துடன் தனது குடும்பத்திற்கான இயக்கமாக மாற்றினார். அன்புமணியின் வளர்ச்சிக்காக, வேல்முருகன், பு தா இளங்கோவன், பேராசிரியர் தீரன், காடுவெட்டி குரு போன்ற பல பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, இல்லையில்லை…. திட்டமிட்டு ஒதுக்கப்பட்டார்கள்.

இதே காலகட்டத்தில், மாற்று கட்சியில் இருந்த வன்னிய தலைவர்களையும் அவர் வன்முறையால் ஓரம்  கட்டப்பார்த்தார். தமிழக காங்கிரசில் தனிப்பெரும் சக்தியாக வலம் வந்த வாழப்பாடியாரையும் திட்டமிட்டு தாக்கினார்கள். இதில், அதிமுக அமைச்சர்  சி.வி.சண்முகமும் விதிவிலக்கில்லை. தமது அரசியில் இருப்பிற்காக தமது இனமே என்றாலும் தயங்காமல் வன்முறையை கையில் எடுத்தார். தமது இனத்தாரையே தாக்க துணிந்த ராமதாஸ், வட தமிழகத்தில் இருக்கும் தலித் சமூகத்தை என்னபாடு படுத்தியிருப்பர் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

திமுகவிலும், அதிமுகவிலும், காங்கிரசிலும், மதிமுகவிலும் மற்றைய கட்சியிலும் உருவாக்கிய வன்னிய தலைவர்கள் துரைமுருகன், MRK பன்னீர்செல்வம், வீரபாண்டி ஆறுமுகம், மருத்துவர்.செந்தில் குமார், செல்வ கணபதி, செம்மலை, சி.வீ.சண்முகம், MC.சம்பத், கே.பி.முனுசாமி, வாழப்பாடி ராமமூர்த்தி, கிருஷ்ணசாமி, திண்டிவனம் ராமமூர்த்தி, செஞ்சி ராமசந்திரன், வாழப்பாடி ராமசுகந்தன் போன்றவர்கள் வளர்ந்தார்கள்.  அது போன்ற தலைவர்கள் ஏன் பாட்டாளி மக்கள் கட்சியில் வளர முடியவில்லை. ஏனெனில், தம்மையோ அன்புமணியையோ மீறிய வன்னிய அரசியல் தலைமை வளர்வதை ராமதாஸ் அவர்கள் என்றுமே விரும்பியதில்லை.

இதன்  ஊடே அவர் விளையாடும் அரசியல் விளையாட்டு தான் 10.5 % சதவீத உள் ஒதுக்கீடு என்பதெல்லாம். இவை அனைத்திலும், சமுதாய நோக்கைவிட தனது சுயநல நோக்கம் தான் பிரதானமானது.

ராமதாஸ் அவர்களின் சுயநல அரசியலால் வஞ்சிக்கப்பட்டது வன்னிய இனமா? என்பதை அந்த இனத்தை சார்ந்த இளையோர்கள் சிந்தித்து அறியவேண்டும்.