சென்னை: பிரதமர் மோடியின் தமிழ் இருக்கை அறிவிப்பு ஏமாற்று வேலையா? தெரிந்தவர் சொல்லுங்களேன்  என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்  டிவிட் பதிவிட்டுள்ளார்.

சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு தினத்தையொட்டி,  அவரை கவுரவிக்கும் வகையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில், சுப்பிரமணிய பாரதியின் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அகமதாபாத்தை தளமாகக் கொண்ட சர்தர்தம் பவனை வீடியோ கான்பரன்சிங் மூலம் 11ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது, “இன்று, செப்டம்பர் 11, மற்றொரு பெரிய நிகழ்வு. இன்று இந்தியாவின் சிறந்த அறிஞர், தத்துவஞானி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ‘சுப்ரமணிய பாரதி’ ஜீயின் 100 வது நினைவு தினம்.

மகாகவி பாரதியின் தமிழ் எழுத்துக்களில் முழு தெய்வீகத்தன்மையுடன் பிரகாசிக்கிறார், ”என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியதுடன்,  பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஹெச்யு) தமிழ் படிப்புக்காக தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நினைவாக நாற்காலி அமைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார். பிரதமர் மோடியின் தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், பனாரஸ் யுனிவர்சிட்டியில் 1972ம் ஆண்டே, நேரு தலைமையிலான மத்தியஅரசு, தமிழ் இருக்கை அமைக்கப்பட்டு இருப்பதாக உஷா சுப்பிரமணியன் என்பவர் டிவிட் பதிவிட்டு உள்ளார். இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை 1962 இல் அன்றைய பிரதமர் நேரு அவர்களால் துவங்கப்பட்டது. அப்படி என்றால் அங்கு மோடி துவக்கிய தமிழ் துறை என்ன என்று கேட்கிறார் அங்கு படித்த முன்னாள் மாணவி. தெரிந்தவர் சொல்லுங்களேன்!