பதிலளிக்க முடியாத கேள்விகள் கேட்கப்பட்டால் அவற்றை திசைமாற்றவும், தங்களின் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், பாரதீய ஜனதாவினர் போலியாகப் பயன்படுத்தும் விஷயம்தான் ‘தேசபக்தி’ என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.

மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் பர்வேஷ் சாகிப் சிங் என்ற அத்தொகுதியின் நடப்பு உறுப்பினர், அக்கட்சியினரின் குணாதிசயத்தை மற்றொருமுறை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

பர்வேஷ் கலந்துகொண்ட ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பதைத்தான் நாம் இங்கே சுருக்கமாக பார்க்கப் போகிறோம்.

அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த பர்வேஷ் சாகிப் சிங்கிடம், இளைஞர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்காக நீங்கள் செய்தது என்ன? என்று கேட்கிறார்.

வசமாக மாட்டிக்கொண்ட பர்வேஷ், சொல்வதற்கான எந்த பதிலும் இல்லாததால், ஏதேதோ பேசி சமாளிக்க முயல்கிறார். ஆனால், சுற்றியிருந்த கூட்டம் விடவில்லை. கேள்விக்கான பதிலைக் கூறுமாறு அவரை வற்புறுத்துகிறது.

தப்பிக்க வழி தெரியாத பர்வேஷ், உடனே கூட்டத்தினரைப் பார்த்து, ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் போடுமாறு கூறுகிறார்.

இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் செளரப் பரத்வாஜ், “நீங்கள் பாரதீய ஜனதா கட்சியினரிடம் உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து கேள்வியெழுப்பினால், அவற்றுக்கு பதிலளிக்க முடியாத அவர்கள், தேசியவாதம் பற்றி பேசத் தொடங்கிவிடுவார்கள். ஏனெனில், அவர்களுடைய ஆட்சியில் ஏதேனும் நன்மை செய்திருந்தால்தானே சொல்வதற்கு” என்றுள்ளார்.

இந்த ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம், இந்தத் தேர்தலில் பல இடங்களிலும் பாரதீய ஜனதா கட்சியால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சண்டிகரில், அத்‍தொகுதியின் நடப்பு பாரதீய ஜனதா மக்களவை உறுப்பினரும், தனது மனைவியுமான கிரண் கெரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த சினிமா பிரபலம் அனுபம் கெர்ரிடம், அவரின் மன‍ைவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர் பயன்படுத்திய வாசகம் ‘பாரத் மாதா கி ஜே’.

தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமாக இருக்கிறது என்று ஒரு யூடியூப் பிரபலம் விமர்சித்துள்ளார்.

இந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுக்கவே, ஒன்றுமே நடக்கவில்லை என சர்வதேச ஊடகங்களால் கூறப்படும் பாலகோட் தாக்குதல் குறித்து, பாரதீய ஜனதாவினர் பேசி வருகிறார்கள். நாட்டை நிர்மூலமாக்கும் பிரச்சினைகள் எவை குறித்தும், 5 ஆண்டுகள் ஆட்சிசெய்த பிரதமர் உட்பட எவருமே பேச முன்வருவதில்லை என்ற கடும் விமர்சனங்கள் பாரதீய ஜனதாவினர் மேல் குவிந்துள்ளன.

ஏனெனில், அந்தளவிற்கு அனைத்தையும் பாடாய்படுத்தி வைத்துள்ளார்கள் என்பதே அதற்கு காரணம். தேசத்திற்கு எதையுமே செய்யாதவர்கள் மற்றும் தேசத்தை சூறையாடியவர்கள்தான், தங்களின் பாதுகாப்பிற்காக தேசபக்தி குறித்துப் பேசுவதாக எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

‘பாரத் மாதா கி ‍ஜே’ கோஷத்தை தங்களின் தற்காப்பிற்காகப் பயன்படுத்தும் பாரதீய ஜனதாவினர் குறித்த ‘நக்கல் – கிண்டல்கள்’ சமூக வலைதளங்களில் ரெக்கைக் கட்டிப் பறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி