சென்னை

நீலகிரி மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் தனியார் வசமாக்கப்பட்டதாக வெளியான செய்திக்குத் தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

மலைகளின் அரசி என புகழப்படும் ஊட்டிக்கு நீராவி மூலம் இயங்கும் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.   கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட இந்த ரயில் தற்போது மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது.   இந்த ரயில் தனியார் வசமாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.  இது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அதற்கேற்றாற்போல் சாதாரண நாட்களில் இந்த ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்ல ரூ.475 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த கட்டணம் ரூ.2500 முதல் ரூ.12000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மேலும் தகவல் வந்துள்ளது.   அத்துடன் இந்த சிறப்பு ரயில் தனியார் நிறுவனப் பெண்கள் காவி உடையில் பணி புரிவதாகப் புகைப்படங்கள் வெளியாகின.

தென்னக ரயில்வே செய்தி தொடர்பாளர் இது குறித்து, “இந்த மலை ரயில் தனியார் வசமானதாக வந்த செய்தி முழுதும் தவறானதாகும்.   அத்துடன் கட்டணம் உயரவில்லை.  இந்த ரயிலை ஒரு தனியார் நிறுவனம் முழுமையாக வாடகைக்கு எடுத்த போது இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்பட்டது.  அத்துடன் பணிப்பெண்கள் காவி உடையுடன் உள்ள புகைப்படம் போலியானது.  இந்த மலை ரயில் தற்போது தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.