நளினி

நீட் தேர்வுக்கான எதிர்ப்பு தமிழகம் முழுதும் எழுந்துள்ளது. இந்த நிலையில், நீட் குழப்படிகளுக்குக் காரணமான மத்திய அரசையும், இதைத் தடுக்க முழுமையாக முயற்சிக்காக தமிழக அரசையும் பலரும் சாடி வருகிறார்கள்.

இதற்கிடையே  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் வழக்கறிஞராக நளினி சிதம்பரம் வாதாடினார்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் வாதாடியது தவறு என்று பலரும் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். மேலும் அவரது வீடும் சில அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது.

இதையடுத்து, “ஒரு வழக்கறிராக வழக்கொன்றில் ஆஜராவது அவரவர் விருப்பம்” என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.

நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் வாதாடியது சரியா, தவறா… வழக்கறிஞர்கள் சார்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தர்ராஜனிடம் கேட்டோம்.

சுந்தர்ராஜன்

அவர் தெரிவித்ததாவது:

“ ஒரு கொலையாளிக்குக் கூட தனது தரப்பை கூற வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சட்டம்,  சொல்கிறது. சம்பந்தப்பட்ட நபருக்கு வழக்கறிஞர் வைத்து வாதாட வசதி இல்லை என்றால், அரசே அவருக்கு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து வழக்கறிஞருக்கான கட்டணத்தையும் அளிக்கிறது.

ஆகவே எந்த வழக்கையும் எந்தவொரு வழக்கறிஞரும் எடுத்துக்கொள்ள சட்டப்படி உரிமை உண்டு.

உதாரணமாக நமது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனை  எடுத்துக்கொள்வோம். அவர் பொது விசயங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை. தான் வாதிடும் வழக்குகள் குறித்துகூட மீடியாக்களிடம் அவர் பேசுவதில்லை. அவர் தன்னை முழுமையான தொழில்முறை வழக்கறிஞராகவே கருதி செயல்படுகிறார். அவரிடம் மக்கள், “வழக்கறிஞர்” என்பதைத்தாண்டி எதையும் எதிர்பார்ப்பதில்லை.

அதே நேரம், நளினி சிதம்பரத்தின் நிலை வேறு.  அவர்,  முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி. இதன் மூலம் பல பலன்களையும் அவர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார். இதற்கு நம்மிடம் தற்போது சாட்சிகள் இல்லாவிட்டாலும் அனைவரும் அறிந்த உண்மை. அவரை பொது மனிதராக மக்கள் பார்க்கிறார்கள்.

ஆகவே வழக்குகளை எடுத்துக்கொள்ளும்போது இந்த பார்வையையும் அவர் வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் வெளிப்பாடே அவருக்கு தற்போது எழுந்திருக்கும் எதிர்ப்பு.

இன்னொரு உதாரணமும் சொல்கிறேன்.  மூத்த வழக்கறிஞர் காந்தி, ஒரு தொ.கா. பேட்டியில், சிவாஜி சிலை அகற்றுவது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர், “சிவாஜி சிலையை அகற்ற வழக்கு தொடுக்க வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். வழக்காடும் தொழில் செய்யும் நான் அதை ஏற்றுக்கொண்டேன். இதோ இப்போது  நாம் இருந்து பேசிக்கொண்டிருக்கும் கட்டிடத்தை இடிக்கச் சொல்லி யாரேனும் வழக்கு தொடுக்க வந்தாலும் அவர்களுக்காக வழக்கறிஞர் என்ற முறையில் வாதாடுவேன்” என்றார்.

வளரும் நிலையில் உள்ள வழக்கறிஞர் யாரேனும்,  இப்படிச் சொன்னால் பரவாயில்லை. (அவர்களே கூட எல்லா வழக்குகளையும் ஏற்க மாட்டார்கள்.)

காந்தியோ  மிக மூத்த வழக்கறிஞர். அவரிடம் ஜூனியராக இருந்த சிலர் இப்போது நீதிபதிகளாக இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தவர். வழக்கறிஞர் என்பதைக் கடந்து சமூகத்திலும் முக்கிய நபராக அவரை மக்கள் மதிக்கிறார்கள்.

ஆகவே காந்தி, நளினி சிதம்பரம்  இவரைப்போன்றவர்கள், வழக்குகளை மட்டும் பார்க்காமல் அதன் பின்னணி குறித்தும் ஆராய்ந்து ஏற்க வேண்டும் என்பதே நான் உட்பட மக்களின் விருப்பம்” என்றார் சுந்தர்ராஜன்.