மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் ?
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.
அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 731 பேர் உயிர் இழந்துள்ளனர்.
19 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை நகரில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மும்பையில் கொரோனை பரவலைத் தடுக்க ராணுவம் வரவழைக்கப்பட இருப்பதாகக் கடந்த சில நாட்களாகவே அங்குக் காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது.
இதனை அந்த மாநில முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இணையம் ஒன்றின் மூலம் அவர் நேற்று 20 நிமிடங்கள் மாநில மக்களுடன் உரையாடினார்.
அப்போது அவர்’’ மும்பைக்கு ராணுவம் வரப்போகிறது என்பது உண்மை அல்ல.நமது காவல்துறையினர் 24 மணி நேரமும் கண் விழித்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியில் சில போலீசாரை நாம் இழந்துள்ளோம். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு படிப்படியாக ஓய்வு கொடுக்க வேண்டும்.
எனவே ,அவர்களுக்குப் பதிலாகக் களப் பணியாற்ற மத்திய அரசுப் படைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படும். இதனால் ராணுவத்தை அனுப்புமாறு நாங்கள் கோருவதாக யாரும் நினைக்க வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
– ஏழுமலை வெங்கடேசன்