சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, 2018 பிப். வரை நடத்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதமே நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மேலும், . தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் ஆணையமோ, ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தாமல், உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில்,  உள்ளாட்சி தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கும் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் குறித்த  தி.மு.க., தாக்கல் செய்த வழக்குடன் சேர்க்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று ( நவ.,6) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில்,  தமிழகத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடந்து வரும் தொகுதி வரையறை பணி 2018 பிப்ரவரி  மாதம் வரை நடைபெறும் என்றும், அதன்பிறகே தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த வாய்ப்பில்லை என்பது உறுதியானது.

மேலும், மார்ச், ஏப்ரலில் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் நடைபெற இருப்பதால், அந்த நேரத்திலும் தேர்தல் நடத்தப்பட மாட்டாது. 

எனவே, அடுத்த ஆண்டு மே மாத பள்ளி  விடுமுறையின்போதுதான் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.