ரஜினி மக்கள் மன்றம் ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியமத்துள்ள நிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் உயர் மட்டக்குழுவை நியமித்ததோடு நின்றிருப்பது, கட்சிப் பணிகளை செயல்படுத்துவதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது:
“கிடதட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலில் நுழைவதாக அறிவித்தனர். ரஜினியைப் பொறுத்தவரை இன்னும் கட்சி பெயர் கொடி அறிவிக்கவில்லை. தவிர பொது விசயங்களில் கருத்து சொல்ல மறுக்கிறார். தவிர இடையில் ஆன்மிகப்பயணமாக இமயமலை சென்று வந்தார்.
ஆனாலும் தமிழகம் முழுதும் பரவலாக மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியத்துள்ளார்கள். திண்டுக்கள் உட்பட சில மாவட்டங்களில் நிர்வாக நியமனம் குறித்த பிரச்சினை இருக்கிறது. இருந்தாலும் தமிழகம் முழுதும் ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியமித்துள்ளதால், மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி சூடுபிடித்துள்ளது.
அதே நேரம் கமலைப்பொறுத்தவரை முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்கறார். தவிர மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்தி “மக்கள் நீதி மய்யம்” என கட்சிப் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
ஆனால் மாவட்ட நிர்வாகிகளே இன்னமும் நியமிக்கப்படவில்லை. 18 பேர் கொண்ட உயர்மட்டகுழு மட்டும் நியமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகளை நியமிக்காததால், உறுப்பினர் சேர்க்கும் பணி உட்பட கட்சிப் பணிகள் செய்ய முடியா நிலை ஏற்பட்டுள்ளது. இது கமலை பின்தங்கச் செய்துவிடும்” எனற விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில் கேட்டபோது, “நாங்கள் வழக்கமான அரசியல் செய்யப்போவதில்லை. மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய மாற்று அரசியலே எங்களது குறிக்கோள். ஆகவே தகுதியான நபர்களை கட்சிப் பணியில் அமர்த்த கால அவகாசம் ஏற்படுகிறது. எங்களுக்கு அவசரம் இல்லை” என்றார்கள்.
மேலும்,”எங்கள் மன்றத்த்தில் இருந்தவர்களே, மக்கள் நீதி மய்யத்தின் ஆணி வேர். அதே நேரம் அவர்கள் கட்சிப் பொறுப்பு வேண்டும் என்று கேட்கவில்லை. தகுதியான நபர்களை வெளியில் இருந்து நியமித்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்று பணி செய்ய காத்திருக்கிறோம். ஆகவே நியமனம் குறித்த கவலை எங்களுக்கு இல்லை. ஆகவே இந்த விசயத்தில் பிறரைவிட கமல் பின்தங்குகிறார் என்பது சரியல்ல” என்றார்கள்.