பகுதி: 1:
கமல் ஒரு கம்யூனிஸ்டா?
கமல் அரசியலுக்கு வரப்போவதாக அவருடைய பாணியில் வழக்கம்போல் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கமல்ஹாசனுடைய அரசியல் கவிதையை ஆளும் அரசிற்கு எதிரான போர்பரணியாக பலர் பார்க்கின்றனர். அரசியல் களத்திற்குள் நுழைவதற்கு அந்த நபர் என்னவாக அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்பது மிக முக்கியம். தேசிய ,திராவிட, இந்துத்துவ, இடதுசாரி என பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. இதில் எந்த முகத்துடன் அரசியலுக்குள் நுழைய பார்க்கிறார் என்பது குறித்து திறனாய்வு தேவைப்படுகிறது.
யார் இந்த கமல்ஹாசன்?
80களுக்கு முந்தைய திரைப்படங்களில் பெரும்பாலும் பிளேபாய் கதாபாத்திரங்கள். அந்த சமயத்தில் ரஜினியின் திரைப்படங்கள் மிகச்சிறந்த குணச்சித்திர திரைப்படங்களாக இருக்கும் (ஆறிலிருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி, ஜானி.)
கமலகாசனின் வளர்ச்சியை 87 க்குப் பிறகு என்று எடுத்துக் கொள்வது போதுமானது. 87 க்குப் பிறகான கமல்ஹாசனின் திரைப்படங்களில்தான் கமலின் தனித்துவம் தெரிந்தது.
நாயகன் படத்திற்கு முந்தைய திரைப்படங்கள் எல்லாம் மசாலா ரகத் திரைப்படங்கள் (மூன்றாம் பிறை போன்ற சில திரைப்படங்களைத் தவிர.)
87 லிருந்து 2017 வரை வந்த எந்த படங்களிலும் எந்த அரசியல் கட்சியை யையும் எதிர்த்து வசனம் பேசியதில்லை. சினிமாவிற்கு அப்பாற்பட்டு, நடந்த அரசு விழாக்களிலும் அரசை விமர்சித்து கமல் பேசியதில்லை.
கலைஞர் முதலமைச்சராக இருந்த போது நடந்த ஒரு விழாவில் , “ஆண்டவனின் புண்ணியத்தில் இந்த விழா நடப்பதாக கூறினார்கள். ஆனால் எனக்கென்னவோ இங்கு ஆள்பவர்களின் புண்ணி யத்தால்தான் இந்த விழா நடைபெறுகிறது” என்றார்.
கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டு அவரையும் புகழ்ந்து, தன்னுடைய நாத்திக அறிவையும் வெளிப்படுத்திக் கொண்டார்.
கமல்ஹாசனின் ஆளும்கட்சி சார்பிற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
தசாவதாரம் திரைப்படத்தில் சுனாமி காட்சிகள் வரும். சுனாமி வந்தது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், ஆனால் தசாவதாரம் திரைப்படம் வெளிவந்தது கலைஞர் ஆட்சிக் காலத்தில். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் வீரசாகசம் புரிந்த கதாநாயகனு்ககு, கலைஞர் ஆட்சிக் காலத்தில் பாராட்டு விழா நடப்பது போல் காட்சி இருக்கும்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில்,சண்டியர் படத்தின் பெயர் பிரச்சனையான போது,ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,விருமாண்டி என பெயர் மாற்றம் செய்தார். அதை அந்த படத்திலும் ஒரு காட்சியில் ,” என்னை சண்டியர்னு கூப்பிடாதீங்க, அதான், “ஆத்தா விருமாண்டின்னு வைச்சி ருச்சுல்ல” என்று சொல்வார். தன்னை ஆதரிக்கும்பொழுதும், தன்னை எதிர்க்கும்பொழுது, ஆட்சியாளர்களை பகைத்துக் கொள்ளாமல் பக்குவமாக நடந்துகொள்வதில் கமலுக்கு நிகர் கமல்.
விசுவரூபம் திரைப்பட பிரச்சனையில் சிறுபான்மை அமைப்புகளின் பக்கமே ஜெயலலிதா நின்றார். அப்போது, அந்த பிரச்சனையில் மீண்டும் மீண்டும் இசுலாமிய அமைப்புகளிடம் வாதம் செய்வதில்தான் தனது சூரத்தனத்தை காண்பித்தார் கமல். அரசை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை.
நான் இந்த நாட்டை விட்டே போகிறேன் என்று பணக்கார வீட்டு குழந்தை போல் சண்டித்தனம் செய்தார். அப்போது கூட ,” என் கருத்துரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது” என்று ஒரு வார்த்தை பேசவில்லையே நம்மவர்.
எந்திரன் திரைப்படத்திற்குப் பிறகு, சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததது. எல்லா திரையரங்கு களையும், குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களே வாங்கி விடுகிறது என்று திரைத்துறை கதறியது. அப்போது. அரசிற்கு எதிராக போர்க்குரல் எழுப்பவே இல்லையே!
தற்போது திரையரங்கிற்கு மாநில அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் என்று சொல்லும் கமல், திரைப்படத்தின் தன்மைக்கேற்ப திரையரங்குகளில் கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும் அதாவது 500 ரூபாய்க்கு குறையாமல் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பத்து வருடங்களுக்கு முன்னால் கருத்து கூறியவர்தான்.
ஊழலுக்கு எதிரான இவருடைய கோபம் இவ்வளவு தாமதமாக வெளிப்படுவதுதான் நம்மை சந்தேகிக்க வைக்கிறது.
கமலும் கம்யுனிசமும்
கமலை இடதுசாரி சிந்தனையாளர் என்று பலர் சிலாகிப்பதுண்டு. என்னை கம்யுனிஸ்ட் என்று தவறுதலாக நினைக்கின்றனர் என்று கமலே கூறினாலும் பலர் கமலை கம்யுனிஸ்ட் என்று தவறுதலாகவே நினைக்கின்றனர். கம்யுனிச தத்துவம் குறி்த்து கமலின் பார்வையை குருதிப்புனல் படத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்
குருதிப்புனல் திரைப்படத்தில் 13 வயது சிறுமியை காமப்பசிக்கு இரையாக்க முயற்சி செய்கிறான் நக்சல் அமைப்பைச் சேர்ந்தவன். அந்த குழந்தையை காப்பாற்ற, கமலின் மனைவி தன்னை எடுத்துக் கொள் என்கிறாள். உடனே,அந்த நக்சல் குழுவைச் சேர்ந்தவன்,கவுதமியிடம் சல்லாபம் கொள்வான்.
கமல்ஹாசனுக்கு நக்சல் அமைப்பின் மீது மாற்று கருத்து இருக்கலாம். அவர்கள் சித்தாந்தை கடுமையாக விமர்சித்து படம் எடுக்கலாம்.அதற்கான எல்லா உரிமையும் கமலுக்கு உண்டு.ஆனால்,புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் காமப்பசிக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்று சித்தரிப்பது எந்த வகையில் அறம்.? தனது வணிக நலனிற்காக, புரட்சிகர அமைப்புகளை இழிவுபடுத்தியது எந்த வகையில் நியாயம்.?
ரஜினிகாந்த் நடித்து ராணுவ வீரன் என்கிற திரைப்படம் வந்தது. அதிலும் தலைமறைவு குழுக்களை மய்யப்படுத்திய திரைப்படம்தான். அந்த படத்தில் நக்சல் அமைப்பச் சேர்ந்த சீரஞ்சீவி வில்லன். அவன் ஊர் பண்ணையார்களை அழிப்பார். ஊர் சொத்துக்களை கொள்ளையடிப்பார். ரஜினிகாந்த் அவருடன் சண்டையிட்டு ஊர் மக்களை காப்பாற்றுவார். இந்த படமும் நக்சல் அமைப்பினரை விமர்சித்து வந்த படம்தான். ஆனால்,இழிவுபடுத்தி வந்தபடமல்ல. இடதுசாரி கருத்தியல் மீது தீரா பகை கொண்டவர்கள் கூட குருதிப்புனல் மாதிரியான படத்தை எடுக்கமாட்டார்கள்.அதனால்,கமலுக்கு இடதுசாரி முகம் பொருந்ததாது .
(அன்பே சிவம் படத்தில் கம்யூனிஸ்டாக நடித்தாரே கமல் என்ற கேள்வி சிலருக்குள் ஓடும். அது குறித்து அடுத்த பகுதியில்…)