மான்செஸ்டர்: இந்திய அணியில் விஜய் சங்கரை, பேட்டிங்கில் நான்காவது இடத்தில் இறக்குவது சரியானதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; விஜய சங்கர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால், அவரால் ஒரு ஆல்ரவுண்டராக செயல்பட முடியும். உலகக்கோப்பை போன்ற கடும் நெருக்கடி கொண்ட போட்டிகளில், விஜய் சங்கர் போன்றவர்கள் நான்காம் இடத்தில் இறங்குவது கடும் அழுத்தத்தை தரக்கூடியதாகும்.
ஷிகர் தவான் காயமடைந்ததால், 4வது இடத்திற்கென்று இருந்த ராகுல், ஓபனிங் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால், அந்த இடத்தில் பேட்டிங் நோக்கத்திற்காகவே அணியில் சேர்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் இன்னும் அணிக்குள் எடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, 6வது பந்துவீச்சாளராகவும் செயல்படுவார் என்ற பயன்பாட்டிற்காகவே விஜய் சங்கர் தொடர்ந்து அணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்.
ஆனால், ஒரு அணியின் வெற்றிக்கு, பேட்டிங் ஆர்டர் என்பதும் மிக முக்கியம். ஆஃப்கன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற வலிமையற்ற அணிகளிடம் இந்தியா வென்றிருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியா போன்ற அணிகளை மீண்டும் வெல்ல வேண்டுமானால் இந்த பேட்டிங் வரிசை போதாது. எனவே, விஜய் சங்கரை 4வது இடத்தில் இறக்குவதை விடுத்து, வேறு மாற்று ஏற்பாடுகளை இந்திய அணி யோசிக்க வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன.