அதிமுக கூட்டணியிலிருந்து பலகட்ட இழுபறிக்குப் பிறகு, வெளியேறியுள்ளது தேமுதிக. குறைந்தபட்ச தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடத்திற்கு சம்மதிக்காதது போன்ற காரணங்கள் வெளிப்படையாக கூறப்பட்டாலும், வேட்பாளர் செலவுக்கான பணத்தை, தேமுதிக தலைமையிடம் நேரடியாக கொடுக்காமல், அதிமுகவே தனது கையில் வைத்து செலவு செய்யும் என்ற நிபந்தனைதான், கூட்டணியிலிருந்து வெளியே பிரதான காரணமாய் கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்திருந்தாலும், அக்கட்சி எதையும் சாதித்திருக்கப் போவதில்லை. ஒரு இடமேனும் வென்றிருக்குமா? என்பது சந்தேகமே! அப்படியிருக்க, தற்போது தனித்துவந்துவிட்ட நிலையில், அதன் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்தாலாவது, தேர்தல் முடிவில், பெரிய தோல்வியை சந்தித்தாலும், ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவிகிதத்தைக் காட்டுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், இப்போது தனித்து வந்து, கமலின் கூட்டணியிலோ அல்லது தினகரன் கூட்டணியிலோ அல்லது தனித்தோ போட்டியிடும்போது, அக்கட்சிக்கு கிடைக்கும் வாக்கு சதவிகிதம் என்னவாக இருக்கும் என்பதை பலராலும் யூகிக்க முடியும்.
அக்கட்சியில் இருந்த முக்கியஸ்தர்கள் பலரும் விலகிவிட்ட நிலையில், ஏதோ சிலபேர் ஒரு கடமைக்காக அதிலேயே இருக்கின்றனர். விஜயகாந்திற்காக வாக்களித்த ஒரு சிறிய கூட்டமும், இப்போது பெரியளவு கரைந்து போயுள்ளது.
இத்தேர்தலில் திமுக பக்கமிருந்து அவர்களுக்கு ஏதேனும் உத்தரவாதம்(பணம்) வழங்கப்பட்டிருந்ததா? என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஏனெனில், தேமுதிக அப்படியான ஒரு கட்சிதான்!
இத்தேர்தலில், அக்கட்சி அடையக்கூடிய மாபெரும் அவமானத்திற்குப் பிறகு, அடுத்த தேர்தல் வரை அக்கட்சி நிலைத்திருக்குமா? விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் செய்யும் சகிக்க முடியாத அலம்பல்கள் அக்கட்சியை எந்தளவில் பாதிக்கும்? என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கடந்த 2011ம் ஆண்டு, அக்கட்சியின் வளர்ச்சிக்கு முடிவுரை எழுதப்பட்டது. 2016ம் ஆண்டு அக்கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னுரை எழுதப்பட்டது. 2021ம் ஆண்டு அக்கட்சியின் கடைசி இருப்புக்கு கட்டியம் கூறப்பட்டுள்ளது!
ஆக, அரசியல் கணக்கை பலவிதங்களில் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து பார்க்கையில், தேமுதிக என்றதொரு கட்சி, அடுத்த தேர்தல்வரை உயிரோடு இருப்பது சந்தேகம் என்பதான விடையே வருகிறது என்கின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள்.