“ரஜினியை மையப்படுத்தி காந்திய மக்கள் இயக்கத்தால் இன்று திருச்சியில் நடத்தப்படும் மாநாட்டில், ரஜினி ரசிகர்கள் பலருக்கு கடும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் மாநாட்டில் சலசலப்பு ஏற்படக்கூடும்” என்று ரஜினி மன்றத்தினரிடையே  ஒரு பே்ச்சு உலவுகிறது.

சமீபத்தில் நடிகர் ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்தார். வழக்கம் போல் “ஆண்டவன் கட்டளைபடியே எல்லாம் நடக்கும்’ என்று புதிராக பேசினார்.  இதையடுத்து வழக்கம்போல், அவர் அரசியலுக்கு வருவாரா என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.

மாநாட்டு மேடை

இந்த நிலையில் காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், ரஜினிதான் தமிழகத்தைக் காப்பாற்றப்போகும் ஒரே மனிதர் என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தார். காந்தியின் மறு உருவம் ரஜினி என்றும் அவர் ஆட்சிக்கு வந்தால் காமராஜர் ஆட்சி மலரும் என்றும் பேசிவருகிறார்.

இந்த நிலையில், திருச்சியில் காந்திய மக்கள் இயக்க மாநாடு ரஜினியை முன்னிலைப்படுத்தி நடக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசும் தமிழருவி மணியன், சில முக்கிய அறிவிப்புகளை (ரஜினி சார்பாக) அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கலீல்

தமிழகம் முழுதுவதிலும் இருந்து ரஜினி ரசிகர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரஜினி ரசிகர்மன்ற பொறுப்பாளர்கள் பலருக்கு உரிய முறையில் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்ற ஆதங்கம் மன்றத்தினரிடையே எழுந்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத மன்ற நிர்வாகிகள் சிலர்,  இது குறித்து நம்மிடம் தெரிவித்ததாவது:

“ஒட்டுமொத்த ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளராக இருந்த சத்தியநாராயணா, மன்றத்தில் பலவித குழப்பங்களை ஏற்படுத்திச் சென்றுவிட்டார். ஆக்டிவாக இல்லாதவர்கள், மிக சமீபத்தில் மன்றத்துக்கு வந்தவர்கள் என பொருத்தமில்லாத பலருக்கு பதவிகளைக் கொடுத்துவிட்டார். அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மன்றங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளாக இயங்குகின்றன.

இந்த நிலையில் முக்கிய பொறுப்பாளர்களை விட்டுவிட்டு, பெயருக்கு மன்றத்தில் இயங்குகபவர்களுக்கு மட்டுமே இன்றைய மாநாட்டுக்கு காந்திய மக்கள் இயக்கத்தினர் அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.

மாநாடு நடக்கும் திருச்சியிலேயே இது போல நடந்திருக்கிறது.

இம்மாவட்டத்தில் கலீல் தலைமையில் ரஜினி ரசிகர் மன்றம் இயங்கி வருகிறது. ரஜினிக்காக துவக்க காலத்திலேயே துவங்கப்பட்ட மன்றங்களில் ஒன்று இது. சாகுல் தலைமையிலும் ரசிகர் மன்றத்தினர் இயங்குகிறார்கள் தவிர

முத்து தலைமையில் “ரஜினி ராஜ்யம்” என்ற அமைப்பும் கர்ணன் தலைமையில் “ரஜினிதளம்” என்ற அமைப்பும் இயங்கி வருகின்றன.

இன்று காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்படும் ரஜனி மாநாட்டை ( இவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்) மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம். ஏனென்றால் ரஜினி சார்பாக தமிழருவி மணியன் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று நினைக்கிறோம்.

ஆனால் மாநாட்டை நடத்தும் காந்திய மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் கணேசன், பெரும்பாலான நிர்வாகிகளை புறக்கணித்துவிட்டார். ரஜினி மன்றத்தின் சாகுல் அணிக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். இதனால் மற்ற அணியினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ரஜினி கணேசன்

ரஜினி என்ற பிரம்மாண்டம், சிறு செடியாக இருந்தபோதே அதற்கு எங்கள் வியர்வையை நீராக ஊற்றி வளர்த்தோம். ஆனால் இன்று காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் ரஜினியுடன் கைகோர்த்து ஏதோ சாதிக்கப்பார்க்கிறார். மன்றத்தினரிலும் பலரை ஒதுக்குகிறார்கள் காந்திய மக்கள் இயக்கத்தினர். ஆகவே மன்றத்தினர் பலர்.. குறிப்பாக.. மன்ற பொறுப்பாளர்கள் பலர் மாநாட்டை புறக்கணிக்கும் முடிவில் இருக்கிறார்கள்” என்று ஆதங்கத்துடன் கூறினார்கள் அந்த ரஜினி மன்றத்தினர்.

இதையடுத்து  காந்திய மக்கள் இயக்கத்தால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிர்வாகிகளி்ல் ஒருவராகக் கூறப்படும் கலீலை தொடர்புகொண்டு பேசினோம்.

ரஜினி திரைத்துறைக்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே மன்றம் துவங்கிய சிலருள் இவரும் ஒருவர். நம்மிடம் பேசிய கலீல், “மன்ற நிர்வாகிகள் பலருக்கு, காந்திய மக்கள் இயக்கத்தினர் அழைப்பிதழ் அளிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே இப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை. மாநாட்டுப் பணிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறு விசயமாகவே இதை நினைக்கிறோம். காந்திய மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் கணேசன், என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். ஆகவே மனஸ்தாபம் ஏதும் இல்லை. தவிர அழைப்பிதழ் கொடுத்துத்தான்  மாநாட்டுக்கு செல்ல வேண்டும் என எந்த ரஜினி ரசிகனும் நினைக்க மாட்டான்” என்றார்.

தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற தலைவர் ரஜினி கணேசனிடம் பேசியபோது, அவரும் இதே கருத்தைத் தெரிவித்தார்.

காந்திய மக்கள் இயக்க திருச்சி மாவட்ட தலைவர் கணேசனை தொடர்புகொள்ள முயற்சித்தோம். தொடர்ந்து அவரது செல் எண், சுவிட்ச் ஆப்லேயே இருந்தது.

காந்திய மக்கள் இயக்க திருச்சி மாவட்ட தலைவர் கணேசனை தொடர்புகொள்ள முயற்சித்தோம். தொடர்ந்து அவரது செல் எண், சுவிட்ச் ஆப்லேயே இருந்தது.

சமீபமாக ரஜினிக்கு நெருக்கமானவராக வெளிப்படும் தமிழருவி மணியன், “ரஜினி நேரடி அரசியலுக்கு வரவேண்டும்” என்று ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே ரஜினி மன்றத்துக்குள் நடக்கும் “அரசியல்களை”யும் அவர் புரிந்துகொள்ள வேண்டும்!