நான் எது செய்தாலும் தோல்வியாகவே முடிகிறது. அடுத்தடுத்த தோல்வி தந்த பாதிப்பு இன்று என்னால் எதுவும் செய்ய முடிவதில்லை. ஏதாவது செய்யலாம் என்று எண்ணினாலே எனக்குள் நடுக்கமும், பதற்றமும், பயமும் ஏற்படுகிறது. வெற்றி என்பது இனி என் வாழ்க்கையில் சாத்தியமே இல்லையா?!

எத்தனை முறை தோற்றோம் என்று எண்ணாமல், ஏன் தோற்றோம் என்று எண்ணினால் அடுத்த முறை நிச்சயம் உங்களுக்கு வெற்றி தான்.

வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி ‘இன்னும் ஒருமுறை முயல்வோம்’ என்பதில் தான் இருக்கிறது என்கிறார் பிரிடிஷ் எழுத்தாளர் “ஆலிவர் கோல்ட்ஸ்மித்”. அதாவது இந்த முறை ஏதோ ஒரு காரணத்தினால் கை நழுவிய வெற்றி இதோ இன்னும் ஒரு முறை கொஞ்சம் விழிப்புணச்சி யோடு முயற்சித்தால் கிடைத்துவிடும் என்று கூறுகிறார்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னும் ஒரு மிக முக்கியமான கருத்தும் இருக்கிறது. அது என்னவென்றால்… எந்த ஒரு முயற்சியும் வெற்றி அடையாமல் முடிவடைவது இல்லை என்பதுதான். இன்னும் தெளிவாக சொல்வதென்றால் நாம் செய்ய ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் வெற்றி அடைந்தால்தான் முடிவுறுகிறது, அந்த இறுதி முயற்சி உங்கள் விழிப்புணர்ச்சியை சார்ந்து இருக்கிறது என்று அறிவுறுத்துகிறார்.

நீங்கள் நினைத்த நேரத்தில், முயற்சித்த தருணத்தில் கிடைக்காத வெற்றியை, தோல்வியாகவோ அல்லது வெற்றிக்கான படிக்கல்லாகவோ உருமாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

நீங்கள் தோற்ற விஷயங்களை குற்ற உணர்ச்சி இல்லாமல் அலசிப் பார்த்தால், மீண்டும் மீண்டும் முயன்றதில் அந்த குறிப்பிட்ட விஷயத்தில் நீங்கள் எத்துனை வல்லுனராகி இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும்.

தோல்வி என்பது உங்களுடைய அடுத்த வெற்றிக்கான ஒரு அஸ்திவாரம். அஸ்திவாரம் என்பது எப்படி மண்ணுக்கு கீழே போடப்படுமோ அது மாதிரி உங்களது வெற்றி பெறாத முந்தைய முயற்சிகள் உங்கள் உழைப்பிற்கான அஸ்திவாரமாக வெளியில் தெரியாமல் உங்களை உறுதியாக்கி இருக்கும். இதை உணர்ந்து கொண்டீர்கள் என்றால், பின்னிழுக்குற இந்தத் தோல்வி, எப்படி வில்லின் நாணை பின்னிழுத்து விட்டால்.., அம்பு சீறிப் பாயுமோ அது போல் உங்களை அதிவேகமாக வெற்றிப் படிகளில் ஏற்றி விடும்.

ஆனால், பொதுவாக கீழே விழுந்து விடாதீர்கள், விழுந்து விடாதீர்கள் என்று சொல்லி சொல்லி வளர்க்கப் படுவதால், விழுவதே பெரும் தவறு என்று பதறுகிறோம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கீழே விழுந்து விட்டால் அப்படியே அவமானத்தில்  நாம் வெட்கித்துப் போகிறோம். ஏதோ மாற்ற முடியாத பெரும் தவறு செய்து விட்டது போல் மிகப் பெரும் குற்ற உணர்விற்கு உள்ளாகி, எங்காவது நம் முகத்தை ஒளித்துக் கொள்ள முயற்சிக்கிறோம்.

பல சமயங்களில் முதல் முறை தோல்வியில் படும் அவமானமும் பதற்றமும் பயமுமே அடுத்தடுத்த தோல்வி களை விதைத்து விட்டுச் சென்று விடுகிறது என்கிறது வாழ்வியல்.

விழுந்துவிடக் கூடாது என்ற கவனத்துடன் இருப்பது சரிதான், அப்படி ஆசைப் படுவதிலும் தவறு இல்லை, ஆனால் விழவே கூடாது என்று நினைப்பது பேராசை மட்டுமல்ல அது யாருக்குமே சாத்தியமில்லாத நிராசை. அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. முதலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள், விழுவது தவறல்ல, அதில் எந்த அவமானமும் இல்லை என்று. அதே சமயம் எத்தனை சீக்கிரம் எழுந்திருக்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.

சிறு குழந்தை நடை பழகுவதை பார்த்திருக்கிறீர்களா… தானே சீராக நடக்கும் முன் அது எத்தனை முறை கீழே விழுகிறது. ஆனால் அவ்வாறு விழும்போது குழந்தை என்ன செய்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா… ஒரு குழந்தை கீழே விழுந்தால், நீங்கள் பதறாத வரை அது அழுவது இல்லை. அழகாய் நிமிர்ந்து அருகில் உள்ளவர்களைப் பார்த்து சிரிக்கும். அதாவது நான் புதிதாக ஒன்றை முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் அதில் முன்னேற்றம் தெரிகிறது என்று சொல்லாமல் சொல்வது போல. அதோடு நிற்காமல் உடனே எழுந்து மறுபடி நடக்க முயற்சிக்கும். இது அந்த குழந்தையின் தாயோ அல்லது வேறு யாரோ இன்றைக்கு இவ்வளவு போதும் என்று அந்த குழந்தையை தூக்கிக் கொள்ளும் வரை நடக்கும். குழந்தை தானாக நடை பழகும் தன் முயற்சியை நிறுத்தாது. இதில் ஒரு பெரிய வாழ்வியல் தத்துவத்தையே இயற்கை குழந்தைக்கு போதித்திருப் பதையும் அந்த குழந்தை நமக்கு போதிப்பதையும் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா…

எடிசன் பல்பை கண்டு பிடிப்பதற்கு முன் ஆயிரம் முறை தோற்றார் என்கிறோம். ஆனால் அந்த சாதனையாளர் நான் ஆயிரம் சோதனை செய்து  பல்பை கண்டு பிடித்தேன் என்கிறார். இதுதான் அவர் சாதனையின் இரகசியம். இப்படி தோல்வியை நாம் பாடமாக எடுத்துக் கொள்ளும்போது அது வெற்றியில் முடிகிறது. தோல்வியைக் கண்டு துவண்டு ஓடும்போது, பயம், பதற்றத்தில் வந்து விடுகிறது. இதை மனோத்துவம் “பர்பஸ் ட்ரெமர்”(purpose tremor) என்கிறது.

அதாவது தோல்வியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முயலாமல் பதற்றம் தொற்றிக் கொள்ள விடும்போது, முதலில் நாம் ஏதோ தவறு செய்து விட்டதாகத் தோன்றும். பின் நமக்கு எதுவும் சரியாக செய்யத் தெரியாது என்று மனம் நம்பத் தொடங்கும். இது, நாம் சுதாரிப்பதற்குள் ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதையாய் ஆழ் மனமெங்கும் வியாபித்து நம்மை செயலாற்ற விடாமல், பயமும் பதட்டமுமான மன அழுத்தத்தில் விட்டு விடும். இதுவே தோல்வியை இயல்பாய் ஒரு பாடமாய் எடுத்துக் கொள்ளும்போது அது நம் மனதிற்குள் முன்னிலும் சிறந்த வெற்றிக்கான வீரிய விதையாகி விடுகிறது.

தோல்வி என்பது இன்னும் சிறப்பாக நாம் ஆரம்பிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமே  எனும் ஹென்றி ஃபோர்ட் ன் வெற்றி வரலாற்றை பார்ப்போம்.

ஃபோர்ட் காரையும் ஹென்றி ஃபோர்ட்ன் சாதனைகளையும் அறியாதவர்கள் இருக்க முடியாது. 1863 இல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று சாதனையாளராக சரித்திரத்தில் இடம் பிடித்த ஃபோர்ட் க்கு தொட்டதெல்லாம் துலங்கி விடவில்லை.

பதினைந்து வயதில் தந்தையார் அன்பளிப்பாக அளித்த கைக்கடிகாரத்தை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து, உறவுகளும், நண்பர்களும் திகைத்து நிற்கும் போதே அதை மீண்டும் சரியாக மாட்டி அசத்திய ஃபோர்ட், 1889 இல் தன்னுடைய 26 வயதிலேயே தன்னுடைய கனவான தன் முதல் கார் கம்பெனியை திறக்கிறார். இரண்டு சிலிண்டர் இன்ஜினில் 4 சைக்கிள் டயர்களுடன் மிக மிக நம்பிக்கையோடு தாயாரிக்கப் பட்ட அந்தக் கார் முழு தோல்வியில் முடிய, அவர் கம்பெனியும் ஒரே வருடத்தில் இழுத்து மூடப்படுகிறது. ஃபோர்ட் சோர்ந்து விடவில்லை. எங்கே தவறு எழுகிறது, அதை எப்படி சரி பண்ணுவது என்று மட்டுமே சிந்தித்து அதற்கான முயற்சிகளை எடுத்து,1991ல் மீண்டும் ஒரு பதிய கார் கம்பெனியை  நிறுவுகிறார். ஆனால், ‘ஆபரேஷன் சக்ஸஸ் பேஷன்ட் டெட்’ ன்னு சொல்வதுபோல், இந்த முறை அவர் முயற்சியின் பலனாக  அவர் கார் மாடல் வெற்றி அடைகிறது. ஆனால் சரியான முறையில் மார்க்கெட்டிங் பண்ண முடியாமல், நஷ்டத்திற்கு ஆளாகி மீண்டும் தோல்வியைத் தழுவுகிறார்.

இந்தத் தோல்வி மார்க்கெட்டில் அவர் மதிப்பை பெருமளவில் குறைக்கிறது. இந்த இடத்தில் வேறு யாராக இருந்தாலும் ஆடிப் போய் இருப்பார்கள். ஆனால், அவர் இந்த தோல்விகளை, தன் தவறுகளை அறிந்து சரி செய்வதற்கான, மீண்டும் ஒரு வாய்ப்பாக மட்டுமே பார்த்து, நல்ல முறையில் முயற்சி செய்து 1903 இல் ford motor company என்று அடுத்த கம்பெனியை நிறுவுகிறார். முந்தைய தோல்விகள் தந்த பாடம், இப்பொழுது கார் மாடல் வெற்றி, மார்க்கெட்டிங் வெற்றி. ஆனால்…,

அப்பாடா! என்று பெருமூச்சு விடுவதற்குள் வாடிக்கையாளர்களிடலிருந்து, காரில் இது சரியில்லை, அது சரியில்லை என்று கம்ப்ளெயின் வந்து குவிகிறது. ஃபோர்ட் சிறிதும் தளரவில்லை. மிகுந்த பொறுமையோடு, உறுதியான தன்னபிக்கையோடு, தன்னுடைய இஞ்சினியர்களை அனுப்பி தவறுகளை சரி செய்வது மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் மற்ற கருத்துக்களையும் கேட்டு வரச் சொல்கிறார். ரிப்பேர் செய்ய சென்ற இஞ்சினியர்கள் திரும்பி வரும்போது கொண்டுவரும் தகவல்களை ஆராய்ந்து அதில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டிருக்கும் குறைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்கிறார்.அவ்வாறு சரிசெய்யப்பட்ட புதிய (model-T) மாடல் கார்கள் தான் இன்றைய ஃபோர்ட் கம்பெனியை சரித்திரத்தில் இடம் பெற செய்தன.

உங்களுடைய எண்ணங்கள் சரியாக இருந்தால் ,உங்கள் மன நிலையில் உறுதி இருந்தால் எந்த தோல்வியையும் வெற்றியாக மாற்றி விடலாம் எனும் ஹென்றி ஃபோர்டின் இந்த ஹிமாலய வெற்றி, என்றோ யாருக்கோ நடந்த சரித்திரம் மட்டும் இல்லை. சரித்திரம் படைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் சாத்தியமானது என்கிறது உளவியல்.

மேலும்  ஃபோர்ட் சொல்வது போல் தோல்வி என்பது நீங்கள் நினைத்ததை விட இன்னும் சிறந்த வெற்றியைக் கொண்டு வரும் ஒரு சந்தர்ப்பம் மட்டுமில்லை, தோல்விகளை புறந்தள்ளி விடாமுயற்சியோடு வெற்றி கொண்டான் என்று உங்களுடைய வெற்றிக்கு அது ஒரு கிரீடமாகவும் அமைகிறது.. என்கிறது வாழ்வியல்.

அவ்வளவு ஏன்,,, இன்றைய ‘போஸ்ட் ரிஸெஷன் இகானமி’ கால கட்டத்தில் தோல்வியை ஏற்றுக் கொண்ட தொழிலதிபர்கள் நிலைத்து நிற்பதோடு மட்டுமல்லாமல், தோற்றவர்களை அவர்களுடைய அனுபவம் கருதி தேடித் தேடி வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள் என்கிறது “பிஸினஸ் வீக்” இதழ்.

இப்பொழுது சொல்லுங்கள் தோல்வி என்றவுடன் உங்களுக்குள் பதற்றம் வருகிறதா..?! பரவசம் பரவுகிறதா..?!

தகவல் உதவி: Muduvai Hidayath

Dr.Fajila Azad, International Life Coach – Mentor – Facilitator

fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad