கொரோனா… இன்று தனது ருத்ர தாண்டவத்தின் மூலம் உலக நாடுகளையே உலுக்கிக் கொண்டிருக்கிறது… இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல…
கண்ணுக்குப்புலப்படாத இந்த கொரோனா வைரஸ் எனப்படும் நுண்ணுயிரி, உலக வல்லரசான அமெரிக்காவையே வந்து பார், உனது திமிர்த்தனத்தை என்னிடம் காட்டு, என்று சவால்விட்டு, தினசரி ஆயிரக்கணக்கானோரை  பலி வாங்கி வருகிறது…

உலக நாடுகள் கொரோனாவை அடக்க மருந்து கண்டு பிடிப்பதாக கூறிக்கொண்டு கோடிக்கணக் கான பணத்தை ஒருபுறம் கொட்டிக்கொண்டிருக்க, உலக சுகாதார நிறுவனமோ, கொரோனா வைரஸ், எப்போது ஒழியும் எனக் கூற முடியாது; அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்,  மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரே போடாக போட்டு, இதற்கு மருந்து கண்டுபிடிப்பது கடினம் என்று கைவிரித்து விட்டது..
இதுமட்டுமின்றி,  ஊட்டச் சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அடுத்த ஆறு மாதங்களில், கூடுதலாக, 12 லட்சம் குழந்தைகள் பலியாக கூடும் என எச்சரிகையும் விடுத்துள்ளது..
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா இன்று இந்தியா உள்பட 210க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி, கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ளது.
ஆரம்பக்காலக் கட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி என சளி, காய்ச்சல் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் சுவாச மண்டலத்தை பாதிக்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா வைரசின் தாக்கம் பல்வேறு புதுப்புதுத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சுவாசக்கோளாறு மட்டுமின்றி, உடலில் உள்ள ஒவ்வொரு முக்கிய உறுப்பையும் பாதிக்கும் என்றும், கொரோனா பாதிக்கப்பட்ட வர்கள் பலவீனம், பேசுவதில் சிரமம், தலைச்சுற்றல் அல்லது உணர்வின்மை, சிறுநீரகம், இதயம் மற்றும் மூளையையும் தாக்குகிறது  என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி ரத்தம் உறைவுக்கு வழிவகுத்து மூளை பாதிப்பு, பக்கவாத நோயையும் உண்டாக்கும் என்றும் பீதி கிளப்பி உள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் உலக பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. பல நாடுகளின் பொருளாதாரம் சீரீகுலைந்து விட்டது  ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் கோடிக்கணக்கானோர் வேலையை பறிகொடுத்துள்ளனர். பலரது சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.

இன்றைய நிலையில், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பல ஆயிரம் கோடிக்கணக் கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
வேலைதேடி மற்ற மாநிலங்களுக்கு சென்று வாழ்க்கையை ஓட்டிவந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அடுத்தவேளை சோற்றுக்கே வழியின்றி, கண்ணீரும், கம்பலையுமாக, நடந்தே தங்களது சொந்த ஊர்களை நோக்கி சென்றுகொண்டிருக்கும் கொடுமை அரங்கேறியுள்ளது.
சாமானி யமக்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு அடுத்த நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதே தெரியாமல் முழிபிதுங்கி திரிகிறார்கள்.
இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மீண்டு வர சில வருடங்கள் ஆகலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது இளையதலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.. வேலையின்மை என்ற பயம் அவர்களிடையே பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதிப்புகளை நினைத்தால்… அயகோ…
வரும் காலங்களில் மக்களிடையே அதிகரித்து வரும் வேலையின்மை, பசி, பட்டினியை பூர்த்தி செய்ய  பணத்துக்காக திருட்டு, கொலை போன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்கவும்  வாய்ப்பு உண்டு.
நடுத்தரவர்க்க மக்களிடையே கடன்சுமை அதிகரிப்பு மட்டுமில்லாமல், அன்றாட வாழ்க்கையிலும் பல மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணத்தால், வீடுகளில் முடங்கி உள்ள இளவட்டங்கள் உள்பட முதியோர் வரை 95 சதவிகிதம் பேர் இணையதளம் மூலம் ஆபாசப்படங்களை பார்த்து வருவதாக ஆய்வுகளும் தெரிவித்து வருகின்றன. இதரன் பாதிப்பு எங்குபோய் முடியுமோ என்பதை நினைத்தால், மேலும் பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அதே வேளையில், தற்போதே பெரும் நிறுவனங்கள் மனிதர்களுக்கு பதிலாக இயந்திர மனிதர்களையும், கம்ப்யூட்டர்களையுமே முழழுமையாக பயன்படுத்தி வருகிறது, மனித சக்திகளை குறைத்து  வருவதால், பல கோடி  பேர் செய்ய வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோய்க் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற ஒரு இக்கட்டான நிலைக்கு இன்று உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன….
ஆனால்,   கொரோனா தாக்கத்தில் இருந்து ஒவ்வொருவரும் தப்பிக்க இன்னும் சில காலம், உலகம் முழுவதும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உலகசுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து உயிர்தப்பிக்க உலக நாடுகளில் இருந்து கோடிக்கணக்கானோர் உயிர்பிழைத்தால் போதும் என கருதி தங்களது சொந்த நாடுகளையும், ஊர்களையும் நோக்கி படையெடுத்து வருகின்றனர்….
தமிழகத்தை பொறுத்தவரை, வந்தாரை வாழ வைக்கும் சென்னையை விட்டே, இன்று ஏராளமானோர் உயிர் தப்பித்தால் போதும் என தங்களது சொந்த ஊர்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்…

கொரானாவினால கடந்த சில மாதங்களாக இருண்டுபோன உலக மக்களின் பழைய வாழ்க்கை மீண்டும் திரும்புமா என ஒவ்வொருவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்…
இவ்வாறு ஒருபுறம் கொரோனா புராணம் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.  மற்றொருபுறம் நோய் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ஆளாளுக்கு பீலா விட்டுக்கொண்டிருக்கிறார்கள்…
எப்படி இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் மனிதர்களால் அடக்கப்படுமா? அல்லது நாம் அடங்கிப்போவோமோ என்பது மில்லியன் டாலர் கேள்வி…