டில்லி

பாஜக அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி சலுகைகளின் உண்மை மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடி மட்டுமே என காங்கிரஸ் முத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

நேற்றுடன் முடிவடைந்த மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது கடந்த 12 ஆம் தேதி பிரதமர் மோடி தனது தொலைக்காட்சி உரையில் பொருளாதார சீரமைப்புக்காக ரூ.20 லட்சம் கோடி அதாவது ஜிடிபியில் 10% உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

அந்த உதவிகள் குறித்த விளக்கங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக அறிவித்து மொத்தம் ரூ.11,02,650 கோடிக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தார்.   அத்துடன் ஏற்கனவே ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகை திட்டங்களின் மதிப்பு ரூ.8,01,603 கோடி எனவும் மொத்த மதிப்பு ரூ. 20.97 லட்சம் எனவும் நிதி அமைச்சர்  தெரிவித்தார்.

இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா செய்தியாளர்களைக் காணொலி காட்சி மூலம் சந்தித்த போது, “சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஏழை மக்களிடம் பணத்தை வழங்கி அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதின் மூலம் மட்டுமே பிரதமர் மோடியால் நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு பாதைக்கு எடுத்து வர முடியும்.

மக்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதற்கும், பொருளாதாரத்தைச் சீர் செய்யத் திட்டங்கள் அறிவிப்பதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன.  கடந்த சில தினங்களாக மத்திய அரசு அறிவித்த பொருளாதார நிதித் தொகுப்பின் உண்மையான மொத்த மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடி மட்டுமே ஆகும்.  அதன் மதிப்பு நாட்டின் ஜிடிபியில் 1.6% மட்டுமே ஆகும்.  பிரதமர் சொல்வது போல் அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி கிடையாது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நான் சவால் விடுகிறேன்.  எனக்குப் பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களின் மீது உடன்பாடு கிடையாது.  நான் பொருளாதார நிதி தொகுப்பு குறித்து புள்ளி விவரங்கள் அளிக்கிறேன்.  அதை தவறு என மத்திய அரசு நிரூபிக்குமா? எனது புள்ளி விவரங்கள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னுடன் வாதிடத் தயாராக இருக்கிறாரா?

எனது கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க வேண்டுமே தவிரப் பதில் கேள்வி எழுப்பக்கூடாது.   அரசின் சரியான திட்டமிடல் இன்மையால் சாலையில் நடந்தே தங்கள் ஊருக்குச் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் நாட்டுக்கும் மத்திய அரசு சரியான பதிலையும் விளக்கத்தையும் கொடுக்க வேண்டும்.

நிதி அமைச்சர் எதிர்க்கட்சியினர் அற்பமானவர்கள் எனக் கூறுகிறார்.  இந்த நாடு நிதி அமைச்சரிடம் இருந்து இது போல ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.  மாறாக மிகவும் பொறுப்பான ஒரு பதிலை எதிர்பார்க்கிறது.

மத்திய அரசு ஏழை மக்களின் கரங்களுக்கு நேரடியாகப் பணம் சேரும் விதத்தில் அறிவிப்புக்களை வெளியிட வேண்டும்  அரசால் கைவிடப்பட்ட ஏழை குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகள்  மீறப்பட்டுள்ளன. மத்திய அரசு இதற்காக ஏழை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.