டில்லி
லடாக் பகுதியை சீனப்படையினர் ஆக்கிரமித்துள்ளனரா என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரை ராகுல் காந்தி கேட்டுள்ளார்
நேற்று முன் தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி மூலம் பாஜக தொண்டர்களுடன் பேசிய போது. “இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்தியா தனது எல்லையைப் பத்திரமாக பாதுகாக்கும் நாடு என உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளோம்” எனத் தெரிவித்து இருந்தார். இதற்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் விமர்சனம் தெரிவித்தார்.
ராகுல் காந்தி தனது டிவிட்டரில். ‘தற்போது எல்லையில் நிலவும் உண்மை நிலவரம் என்ன என்பதை அனைவரும் அறிவார்கள். அப்படி இருந்தாலும் அனைவருடைய மனதில் மகிழ்ச்சியை உண்டாக்க இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும்” என விமர்சித்திருந்தார்
ராகுல் காந்தியில் டிவீட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “கை வலிக்கும் போது நீங்கள் அதற்கு மருந்து பயன்படுத்துகிறீர்கள். ஆனால் கையே வலியாக இருக்கும் போது என்ன செய்ய முடியும்?” எனக் காங்கிரஸின் கை சின்னத்தை விமர்சனம் செய்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இது சென்ற நூற்றாண்டு கவிஞர் ஒருவரின் கவிதையைத் தழுவிய கருத்தாகும்.
இதற்கு ராகுல் காந்தி டிவிட்டரில், “காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தைக் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது கருத்தைக் கவிதையாகத் தெரிவித்துள்ளார். அவர் லடாக் எல்லையில் சீனா ராணுவம் ஆக்கிரமித்துள்ளதா என்பதற்கு இனியாவது பதில் அளிப்பாரா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.