டில்லி

ரிசோதனை முடிவடையாத மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பல தீவிர நோய்களுக்குச் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டறியப்படாமல் உள்ளன.   அதே வேளையில் பல மருந்துகள் முழுமையான பரிசோதனை முடியாததால் அந்த மருந்துகள் விற்பனைக்குக் கிடைப்பதில்லை.  ஒரு சில மருந்துகள் மக்களுக்குக் குணம் அளிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாவிட்டாலும் அந்த மருந்துகளின் தேவை அதிகமாக உள்ளது.

எனவே சுகாதார அமைச்சகம் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் விதிகளில் சில திருத்தங்கள் செய்துள்ளன.   அந்த திருத்தத்தின்படி கொரோனா போன்ற கொள்ளை நோய்களுக்கான மருந்துகளை மருத்துவ பரிசோதனை முழுமையாக முடியாத நிலையிலேயே இறக்குமதி செய்ய அனுமதிக்கலாம் என விதிகள் மாற்றப்பட உள்ளன.

இந்த விதிகள் திருத்தத்தின் மூலம் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கவி நிலையம், ஆராய்ச்சி மையம் ஆகியவை உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு புதிய மருந்துகளை இறக்குமதி செய்ய முடியும்.  இதை நோயாளிகளின் நிலையைக் கருதி ஒரு இரக்கத்துடன் மத்திய அர்சு அனுமதிக்கலாம் எனத் திருத்தப்பட உள்ளன.

இதன் மூலம் தீவிர நோய் தாக்குதலுக்கு ஆளானோர், அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டோர், குறிப்பாக குழந்தைகளுக்கு உண்டாகும் பல புது நோய்கள் போன்றவற்றுக்கான மருந்துகளைச் சுலபமாக இறக்குமதி செய்ய முடியும்,   இன்னும் இரு வாரத்தில் இந்த விதிகள் திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.