‘தொல்காப்பியப் பூங்கா’ யாருக்கானது என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் மிக முக்கியமான இயற்கைச் சொத்தாகக் கருதப்படும் ‘தொல்காப்பியப் பூங்கா’ (அடையாறு சூழியல் பூங்கா), தற்போது பொதுமக்களுக்கான பூங்காவாக இல்லாமல், சில வசதி படைத்தவர்களின் “தனியார் நடைப்பயிற்சி கிளப்” போல மாறிவருகிறது என்ற குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பொது வசதி, எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது? என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் நகர மக்களின் பிரதான கேள்வியாக உள்ளது.

ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள இந்த 58 ஏக்கர் பரப்பளவு கொண்ட சூழியல் பூங்கா, சுமார் ₹42.4 கோடி அரசு நிதியில் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது, இந்தப் பூங்காவுக்குள் நுழைவதே சாமானியர்களுக்கு சாத்தியமற்ற விஷயமாக மாறியுள்ளது.
பூங்காவின் அதிகாரப்பூர்வ முன்பதிவு இணையதளத்தில், ஏப்ரல் 20-ம் தேதி வரை அனைத்து நேரங்களும் (slots) நிரம்பிவிட்டதாக காட்டப்படுகிறது.
இதற்குக் காரணம், குடியிருப்போர் நலச் சங்கங்கள் (RWAs), அருகிலுள்ள வசதி படைத்த குடியிருப்புகள் மற்றும் வழக்கமான நடைப்பயிற்சி குழுக்கள் நீண்டகால பாஸ்கள் மூலம் பெரும்பாலான இடங்களை முன்பதிவு மூலம் கைப்பற்றியிருப்பதே என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு நேரத்திற்கு (slot) 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்; ஒரு நாளைக்கு மொத்தம் 500 பேர் மட்டுமே நுழைய முடியும். வார இறுதிகளில், டிக்கெட் இல்லாதவர்கள் நேரடியாக திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
ஸ்பாட் புக்கிங்கிற்காக ஒதுக்கப்படும் 50 டிக்கெட்டுகள் கூட, பாஸ் வைத்திருப்பவர்கள் வராத பட்சத்தில் மட்டுமே வழங்கப்படுவதால் சாமானியர்களுக்கு இந்த பூங்காவின் கதவு திறக்கப்படுவதே இல்லை.
இதனால், நகரின் பிற பகுதிகளில் வாழும் மக்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் இந்தப் பூங்காவை பார்ப்பதற்கே வாய்ப்பின்றி வெளியே நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தப் பூங்காவை ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி நகர், சாந்தோம் போன்ற பகுதிகளில் வசிக்கும் வி.ஐ.பி-க்களே அதிகளவில் பயன்படுத்துவதாகப் பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது.
“பொதுப்பணத்தில் கட்டப்பட்ட ஒரு பூங்கா எப்படி தனியார் கிளப்பாக மாற முடியும்?
அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் எளிதாக உள்ளே செல்ல முடிகிறது. ஆனால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லையா?”
என்று அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் இதுகுறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதற்கு, சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை (CRRT) அதிகாரிகள் :
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஒரு நேரத்தில் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது நிலவும் இட நெருக்கடியால், ஏப்ரல் 20-க்குப் பிறகே அடுத்தகட்ட முன்பதிவுகள் தொடங்கும்.
என்று விளக்கம் அளித்துள்ளனர்.
[youtube-feed feed=1]