விருந்தினர் பக்கம்: 
(இந்தப் பக்கத்தில் பல்வேறு பிரமுகர்களின் கருத்துக்கள் இடம் பெறும். அவை அந்தந்த பிரமுகர்களின் கருத்துகளே.  இப்போது இந்துத்துவ  பிரமுகர் நம்பி நாராயணன் அவர்களது கட்டுரை இடம் பெற்றுள்ளது.)
பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பூத உடலுக்கு அருகில், அதிமுக எம்பி., எம்.எல். ஏக்களுக்கு மத்தியில் பாஜகவின் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, முரளீதர்ராவ் ஆகியோர் நாள் முழுவதும் இருந்தது எதிர்கட்சியினரை உறுத்திக் கொண்டிருந்த வேளையில்,  இறுதி  அஞ்சலி  செலுத்த வந்த பிரதமர் மோடி சசிகலாவின் தலையை வருடி ஆறுதல்சொன்னதும், இருமுறை தேம்பித் தேம்பி மோடியின் மார்பில் ஓபிஎஸ் சாய்ந்ததும் அதிமுக அரசை பாஜக. ஆட்டுவிக்கிறதா .என்ற கேள்விக்கு உரம் போட்டன.

ஜெயலலிதாவின் சிகிச்சை நாட்களில் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவர்களை அப்பல்லோவுக்கு அனுப்பி வைத்தபோதே பாஜக மீதான அந்தக் குற்றச்சாட்டு உருப்பெற்றுவிட்டது. சில நிபந்தனைகளோடுஜெயலலிதா எதிர்த்து வந்த ஜிஎஸ்டி,  உதய்மின் திட்டம்  ஆகியவற்றிற்கு  ஆதரவு  என்ற  ” பொறுப்பு முதல்வர் ” ஓபிஎஸ்சின்  நிலை பாடுகள்  இந்தக் கூற்றுக்கு வலுசேர்த்தன.
ஜெ-யின் மறைவிற்குப் பிறகான நிகழ்வுகளின் காரணமாக  தற்போது இந்தக் கேள்வி முழு  வீச்சில்  வலம்  வந்து  கொண்டிருக்கிறது.  வெங்கய்யாவும்  தமிழக பாஜகவின் பிரபல வக்கீல்  மாநிலத் தலைவி   ஒருவரும்  சேர்ந்தே   சசியோடு பேசி  ஓபிஎஸ்சை   முதல்வராக்க ஒப்புக் கொள்ள  வைத்ததாக  வாட்ஸ்  அப்பில்  சுற்றுக்கு  விடப்பட்ட  செய்தி நியாயமான  பல பாஜகவினரை முகம்  சுழிக்க  வைத்தது என்றால் சில அதிமுக விசுவாசிகளுக்கு கடும்கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது.
சசியின் தலையில் மோடி கையை வைத்து ஆறுதல் சொன்ன நிகழ்வின் புகைப்படத்தை ” உன் குடுமி என் கையில் “ என்று விமர்சித்து சமூக ஊடகங்களில் சுற்றுக்கு விடப்பட்ட செய்தி ரசனைக் குறைவாக இருந்தது. தவறான   இவை  அனைத்தும்  கூட இக்கேள்விக்கான  இதர  காரணங்கள்.  ஒரு  மத்திய அரசு  மாநில  அரசோடு திரை மறைவில் பேசுவதற்குக் கூட அதிகார  பூர்வமான பல மடைகள் உள்ள போது  அரசியல் தலைவர்களைக் கொண்டு பேசாது என்பதை அறியாத சிலர் இட்டுக்கட்டிய செய்திகள் இவை.

இவற்றைப் புனைந்தவர்கள் திமுகவினரா, வேறு பாஜக எதிரணியினரா அல்லது சில அதீத பாஜக ஆர்வலர்களா என்று தெரியவில்லை. அதீத பாஜக ஆர்வலர்கள் என்றால் இவர்கள் கட்சிக்கு நல்லது செய்பவர்கள் அல்ல என்று அக்கட்சி உணர வேண்டும். இந்த நிகழ்வுகள் அனைத்தும் “அதிமுக அரசை ஆட்டுவிக்கிறதா பாஜக..” என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றன.
உண்மையில் பாஜகவை விட அதிமுகவிற்குத்தான்  இது சோதனைக் காலம். என்னதான் உயிர்த் தோழியாக இருந்தாலும் ஜெயலலிதா இடத்தில் அவரா என்றும் அவர் ” உயிர்த் தோழி அல்ல, உயிரை எடுத்ததோழி ” என்றும் அவர்மீது அவநம்பிக்கையை  உருவாக்க, கோபத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் முனைந்து செயலாற்றி வருகின்றன.
போதாக் குறைக்கு, அவர்மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இன்னமும் நிறைவு பெறா மல்தான் உள்ளது. எனவே இந்த அத்தனைச் சிக்கல்களில் இருந்தும் அவர் மீண்டாக வேண்டும்.ஜெயலலிதாவுக்குஅளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய மர்ம முடிச்சை அவிழ்க்க சிலர் நீதிமன்றத்தை அணுகும்பட்சத்தில் அதில் இருந்தும் அவர் மீண்டு வரவேண்டும். ஓ.பி.எஸ்சைப் பொருத்தவரை தன்னைஎதிர்க்கும் சில கட்சிக்காரர்களுக்கு மத்தி யில் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு உள்ளது. ஜெயாவின் வழிகாட்டுதல்களில்தான் அவர் சென்ற இரு முறைகள் செயல்பட்டாலும் கொள்கைமுடிவுகளைத் தவிர, அதிகம் இல்லை என்றாலும்  சில நிர்வாக முடிவுகளை, மிகவும் சரியாக எடுத்து செயல்பட்டிருக்கிறார்.
தற்போது வர்தா புயலின் போது அவரின் செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டுவிட்டது.  அவரின் செயல் பாடு  மட்டுமல்ல, ஒவ்வொரு அமைச்சரும் நன்றாகவே செயல்பட்டுள்ளனர்.  தங்கள் தங்கள்  துறையின் செயல்பாடுகள் பற்றி அவர்கள் அளித்த பேட்டிகளில் சிறந்த தெளிவு இருந்தது.
ஆனால்; ஜெ-யின் ஆட்சியின் போது இவர்கள் யாரும் வாய் திறந்து பேசியதுகூட இல்லை. இவர்களுக்கும் தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதை அறிய முடிகிறது. எம்.எல்.ஏக்களைப்பொருத்தவரை பலர் புதியவர்கள். அவர்கள் யாரும் அடுத்த நாலரை ஆண்டுகளை தியாகம் செய்ய தயாராக இருக்க மாட்டார்கள். சில மாநிலங்களவை எம்.பிக்களைக் கொண்டு அதிமுகவை உடைத்து விடலாம்என்று திமுக கணக்குக் போடுமானால் அதைவிட தவறான கணிப்பு எதுவும் இருக்க முடியாது. எம்.பி.களின் சுயலாபத்திற்காக எந்த எம்.எல்.ஏயும் பலிகடா ஆக மாட்டார்கள். ஆட்சி போனாலும் அவர்கள்எம்.பி.கள், ஆனால் இவர்கள் எம்.எல்.ஏக்கள் இல்லை என்பதை அறியாதவர்கள் அல்ல இந்த எம்.எல்.ஏக்கள்.
எனவே அவர்கள் மத்திய அரசின் ஆதரவோடு ஆட்சியை ஸ்திரமாகக் கொண்டு செல்லத்தான் விரும்புகிறார்கள். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஏற்கனவே டிக்கெட் பெற்று, களத்தில்இறங்கி, காசைச் செலவழித்துவிட்டு, கையைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருக்கும் அதிமுகவின் உள்ளாட்சி வேட்பாளர்களும் இன்றைய நிலையில் கட்சி பிளவு படுவதையோ, ஆட்சியை இழப்பதையோகிஞ்சித்தும் விரும்பவில்லை. எனவே எந்தக் குழப்பமும் இன்றி அதிமுக எல்லாவித சிக்கல்களில் இருந்தும் எவ்வித சேதாரமும் இல்லாமல் வெளிவந்துவிடும். அதிமுகவின் நிலை இதுதான். சங்க பரிவாரின்பல்வேறு அதிருப்திகளுக்கு உள்ளாகி இருந்த காலத்தில் கூட ஜெ தலைமையிலான மாநில அரசை மத்திய அரசு நட்பு அரசாகத்தான் நடத்தி வந்துள்ளது. இப்போதும் அந்நிலையில் இருந்து மாற வேண்டியஅவசியம் எழவில்லை.

நம்பி நாராயணன்

அதுமட்டுமல்ல, அதிமுக நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி. ஆகவே இந்த ஆட்சி தொடர்வதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது. அதன்  காரணமாகவே தனது முழு ஆதரவு உண்டு என்று தெளிவாகஅறிவித்தும் விட்டது. தமிழகத்தின் இன்றைய நிலை இரு கட்சிகளுக்குமே பரஸ்பரம் வெற்றி கொடுக்கும்  சூழலில்தான் உள்ளது.   இதை ஆங்கிலத்தில் Win Win Situation என்று  கூறுவார்கள்.  இதில்  ஆடு வோரும்  இல்லை,  ஆட்டிவிப்போரும் இல்லை அதிமுக பற்றி பொது வெளியில் ஏற்படுத்த பட்டு பலராலும் நம்பப்படும் பிம்பம்தான் –அடிமைகளின் கட்சி,  கூன் பாண்டியர்களின் கட்சி,  இவர்களுக்கு  என்றைக்கும்  முதுகு நிமிரப் போவதில்லை –என்ற  பிம்பம் தான்  மேற்படி பாஜக ஆட்டுவிக்கிறதா என்ற கேள்வியை  பொது மக்கள் மத்தியில்  ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
வர்தா புயல் இவர்களின் முதுகுகளை நிமிர்த்தி இருப்பதை இப்போது காண முடிகிறது. இவர்களின் நிர்வாகத் திறனையும் புரிய வைத்துள்ளது. ஒரே சூழல் என்றும் நீடிப்பதில்லை…! சுயமாகவே அதிமுக முடி வெடுத்து, மத்திய  அரசில் தன்னை இணைத்துக் கொண்டு,  ஓரிரு அமைச்சர்களையும் பெற்று  தொடர்நடை போட விரும்பி னால்  பாஜக அம்முடிவை மகிழ்ச்சியாக  ஏற்றுக் கொள்ளும் என்று தெரிகிறது.
ஆனால் மாநில நிர்வாகத்தில் தன் கட்சித்  தலைவர்களோ  உறுப்பினர்களோ    தலையிடுவதை அது  என்றும் ஆதரிக்காது. கொள்கை  ரீதியான மத்திய மாநில  இணக்கங்கள் தேவைப்படும்  வேளையில் மாநில உரிமை களை மதித்து செயல்படுவதைத்தான் இதுவரை பாஜக அரசு  வெளிப்படுத்தி வந்துள்ளது அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு உட்பட்டு  மாநிலத்தில் சுயாட்சியும்  மத்தியில் கூட்டாட்சியும் தொடரும் என்பது எந்த வகையிலும் ஆட்டுவிப்பு ஆகாது.
-நம்பி நாராயணன்