டில்லி

ரு மிகப் பெரிய பொதுத்துறை வங்கி தனது ஊழியர்களிடம்  ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தைக் குறைக்க உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கும் போது பிரதமர் மோடி கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் கள்ள நோட்டுக்களைப் பிடிக்கவும்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.  அத்துடன் புதிய ரூ. 500 நோட்டுக்களும் ரூ. 2000 நோட்டுக்களும் வெளியிடப்பட்டன.    இந்த 2000 ரூபாய் நோட்டில் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்க முடியாது என அரசு உறுதி அளித்தது.

ஆனால் பல இடங்களில் ரூ. 2000 கள்ள நோட்டுக்கள் பிடிபட்டு வருகின்றன.   பதுக்கப்பட்டு பிறகு பிடிபட்டுள்ள ரூ. 2000 நோட்டுக்களில் 56% கள்ள நோட்டுக்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த ஒரு சோதனையில்  ரூ 2000 மற்றும் ரூ. 500 கள்ள நோட்டுக்கள் அச்சடிப்பது கண்டறியப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் இருந்து ரூ.17.7 லட்சம் மதிப்புள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிடைத்துள்ள பதிலின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் ரிசர்வ் வங்கி ரூ. 2000 நோட்டுக்கள் அடிப்பதை முழுவதுமாக நிறுத்தி உள்ளது.   புழக்கத்துக்கு போதுமான அளவு நோட்டுக்கள் அச்சடித்து விட்டதால் இனி அச்சடிக்கப் போவதில்லை என அந்த பதிலில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிசினஸ் இன்சைடர் என்னும் ஆங்கில செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஒரு பெரிய பொதுத் துறை வங்கி தனது ஊழியர்களுக்கு ரூ. 2000 நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அத்துடன் இந்த நோட்டுக்களை ஏடிஎம் இயந்திரங்கள் மூலமோ கவுண்டர்கள் மூலமோ மக்களுக்கு வழங்க தடை விதித்துள்ளது.   அதே வேளையில் வாடிக்கையாளர்கள் அளிக்கும் ரூ.2000 நோட்டுக்களைத் தடையின்றி பெறலாம் என தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.