தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அரசியல் பதிவுகளைப் பதிந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்த கமல், தற்போது அரசியல் பிரமுகர்களை சந்தித்துவருகிறார். சமீபத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை வந்த டில்லி முதல்வர் கேஜ்ரிவால் கமல்ஹாசனை சந்திப்பார் என்று தகவல் பரவியது. அதற்கேற்ப, இன்று கமல்ஹாசனின் சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் இருவரும் சந்தித்தனர். தனது கட்சியில் கமல் சேர வேண்டும் என்று கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம், கமல் தனிக்கட்சி துவக்கி கெஜ்ரிவாலுடன் கூட்டணி வைப்பார் என்றும் ஒரு பேச்சு உலவுகிறது.

முன்னதாக சென்னை விமான நிலையத்துக்குச் சென்று கெஜ்ரிவாலை அழைத்து வந்தார் கமலின் மகல் அக்சரா ஹாசன். அரசியல் ரீதியான கெஜ்ரிவாலின் பயணத்தில், அக்சரா முன்னிலைப்படுத்தப்படுவதில் இருந்து கமலின் கட்சியில் அவருக்கும் முக்கிய பங்கு இருக்கும் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

மேலும், “கமலின் மூத்தமகள் ஸ்ருதிக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. திரைத்துரையில் தொடர்ந்து ஈடுபடவே அவர் விரும்புகிறார். ஆனால் அக்சராவைப் பொறுத்தவரை பொது விசயங்களில் அதிக ஈடுபாடு காண்பிக்கிறார். ஆகவே அரசியலில் அப்பா கமலுக்கு உதவியாக அவர் செயல்படுவார். ஆகவே அவரை முன்னிலைப்படுத்தும் விதத்தில்தான் கெஜ்ராவாலை வரவேற்று அழைத்துவர கமல் அனுப்பியிருக்கிறார்” என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.