சென்னை: அமலாக்க இயக்குனரகத்தின் இடைக்கால இயக்குநராக ஐஆர்எஸ் அதிகாரி ராகுல் நவின் நியமனம் செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது.  இவர் 1993-பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி ஆவார்.

மத்திய அமலாகத்துறையின் இயக்குனராக செயல்பட்டு வந்த சஞ்சய் மிஸ்ராவின் பதவி காலத்தை மத்திய அரசு தொடர்ந்து மூன்று முறை நீட்டித்து வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி  உச்சநீதிமன்றத்தை நாடியது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே ஆகியோர்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த மே மாதம் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பினை வழங்கியது. தீர்ப்பில்,  அமலாக்கத் துறை இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டித்தது சட்ட விரோதம் என்றும், மத்திய அரசின் பதவி நீட்டிப்பு ஆணையை ரத்து செய்தும், மிஸ்ரா ஜூலை 31-ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ஆணை, உச்ச நீதிமன்ற டிவிசன் பெஞ்சின் 2021 ஆண்டு தீர்ப்புக்கு முரணானது. அதில், மிஸ்ராவின் பதவியை நவம்பர் 2021-க்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் சட்டத்தினை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்றாலும், கடந்த 2021-ஆம் ஆண்டு மிஸ்ரா பதவியில் நீடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சிறப்பு ஆணையிட்டிருக்கிறது என்று தெரிவித்தது. மேலும், வரும் ஜூலை 31-ம் தேதி வரை சஞ்சய் மிஸ்ரா பதவியில் இருக்கலாம் என்றும், அதற்கு அமலாக்கத் துறைக்கு புதிய இயக்குநரை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து,  மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதாவது சில முக்கிய வழக்குகளை சஞ்சய் மிஸ்ரா விசாரித்து வருவதால், அதன் காரணமாக அவரது பதவி செப்டம்பர் மாதம் வரையில் நீட்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பேரில் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15 வரை மட்டுமே மிஸ்ரா அமலாக்கத்துறை இயக்குனர் பதவியில் இருக்க வேண்டும். அதற்கு மேல் பணி நீட்டிப்பு குறித்த கோரிக்கைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறை இடைக்கால புதிய இயக்குனராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1993 பேட்ச் இந்திய வருவாய்த்துறை பயிற்சி (IRS) பெற்றவர் இந்த அறிவிப்பானது நேற்று (செப்டம்பர் 15ந்தேதி)  வெளியாகியுள்ளது. ராகுல் நவீன் பொறுப்பு இயக்குனராக மட்டுமே செயல்படுவார் எனவும், விரைவில் புதிய இயக்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பணியில் அமர்த்தப்படுவார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராகுல் நவின்  1993-ஆம் ஆண்டு இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரி ஆவார். இவர் தற்போது சிறப்பு இயக்குநர்-தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக (ED தலைமையகம்) பணியாற்றி வருகிறார். இவரை பொறுப்பு தலைமை அதிகாரியாக குடியரசு தலைவர் உத்தரவிட்டள்ளார்.

இதுகுறித்து நிதியமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரித்விக் பாண்டே வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவில், “ஐஆர்எஸ்-84 பேட்ச் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை அமலாக்க இயக்குனரகத்தில் அமலாக்க இயக்குனராக நிறுத்தி, ராகுலை நியமித்ததில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார். நவீன், சிறப்பு இயக்குநர் (ED), வழக்கமான இயக்குநரை நியமிக்கும் வரை அல்லது அடுத்த உத்தரவு வரை, எது முந்தையதோ அதுவரை அமலாக்கத்துறையின் பொறுப்பு இயக்குனராக நீடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.