ஈராக் நாட்டின் மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஈராக் ராணுவம் ஐஎஸ் இயக்கத்தின் தலைவரை சுற்றிவளைத்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

isis_leader

ஈராக்கிய குர்திஸ்தான் தலைவர் மசூத் பர்சானியின் தலைமை அலுவலர் ஃபவாத் ஹுசேன் “ஐஎஸ் தலைவர் பாக்தாதி மொசூலில்தான் இருக்கிறார். அவரை கொன்றுவிட்டால் ஒட்டுமொத்த ஐஎஸ் இயக்கமும் நொறுங்கிப்போகும், இவர் கடந்த ஒன்பது மாதங்களாக மொசூலில்தான் பதுங்கியிருகிறார், இவரது வலக்கரங்களாக விளங்குவோர் மொசூலில் இருக்கும் ஐஎஸ் தளபதிகள்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பாக்தாதியை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பது அவ்வளது எளிதல்ல, அவரது வீரர்கள் அவரைக் காக்க தங்கள் உயிரை பணையம் வைத்து இறுதிவரை போராடுவார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை பாக்தாதி போரில் கொல்லபட்டால் ஐஎஸ் படை தங்களது அடுத்த தலைவரை கடுமையான போரின் நடுவில் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். ஆனால் உண்மையில் அங்கு இரண்டாம் கட்ட தலைவர் யாரும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
நிச்சயமாக ஐஎஸ் படை போரில் மண்ணைக் கவ்வும், ஆனால் அது நடக்கப்போவது இன்னும் எத்தனை நாட்களில் என்பதைத்தான் யூகிக்க இயலாது. ஏனெனில் மொசூல் நகரை தக்கவைக்க ஐஎஸ் படையினர் எதையும் செய்யக்கூடும். டைகரிஸ் நதியில் மேல் இருக்கும் ஐந்து பாலங்களையும் அவர்கள் தகர்க்கவும் தயங்க மாட்டார்கள் என்று ஹுசேன் தெரிவித்துள்ளார்.