டெஹ்ரான்: சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் துருக்கிய துருப்புக்கள் ஊடுருவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஈரான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, துருக்கி வெளியுறவு அமைச்சரைத் தொடர்புகொண்ட ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஷரீஃப், தனது நாட்டின் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.

சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் உறுதியாக வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பின் மூலம், ஐஎஸ்ஐஎஸ் விஷயத்தில் அந்நாட்டின் நட்பு சக்திளாக இருந்த குர்திஷ் படைகளை அமெரிக்கா கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் குர்திஷ் படைகளை கைவிடும் நிலையில், அப்பகுதியில் துருக்கி ராணுவம் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான், இதற்கு ஈரான் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

சிரிய நாட்டின் இறையாண்மையும் ஒற்றுமையும் பாதுகாக்கப்பட வேண்டுமென கூறியுள்ளது ஈரான். சிரியா விவகாரத்தில், ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஒருங்கி‍ணைந்து செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.