டெல்லி:
ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. இதனால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எண்ணை வளம்மிக்க ஈரானின் இருந்து கச்சா எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக உலக நாடுகளில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்றைய விலையை விட இன்று 9 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ 78.48 ஆக விற்பனையாகிறது. அதுபோல் டீசல் விலை 11 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ 72.39 உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் முக்கியமான நாடுகளில் ஈரான் நாடு ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. அங்கு நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை திடீரென 4.4 சதவீதம் அதிகரித்து 69.16 டாலராக உயர்ந்துள்ளது.
வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் சந்தையில் 4.3 சதவீதம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து 63.84 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.