சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தலைமை பதவிகளை விவசாய பட்டதாரிகளான தமிழர்கள் இருவர் அலங்கரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தலைமைச்செயலாளர் இறையன்பு, மற்றொருவர் தமிழக புதிய டிஜிபி சைலேந்திரபாபு.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதுமுதல் ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். முதலில், தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ. இறையன்பு நியமிக்கப்பட்டார். தற்போது காவல்துறையின் தலைமை அதிகாரியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டு உள்ளார். இருவரும் பக்கா தமிழர்கள் மட்டுமின்றி, இருவருமே விவசாயத்துறை எடுத்து படித்து பட்டதாரியாகி, பின்னர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக மாறி, பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமாகி உள்ளனர்.

தலைமைச்செயலாளர் இறையன்பு:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலராக பணிபுரிந்த இறையன்பு, தற்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மிகச்சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.
சொந்த ஊர் சேலத்தை சேர்ந்த இவர், கடுமையான உழைப்பு, நேர்த்தியான நிர்வாகம் மற்றும் பல்துறை திறமைகளுக்கு சொந்தக்காரர். சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை அடிப்படையிலான பல புத்தகங்களை எழுதியுள்ளார். விவசாயம், உளவியல், இலக்கியம் என பலதுறைகளில் பட்டம் பெற்றவர். சுய முன்னேற்ற புத்தகங்கள் மற்றும் உரைகள் போன்றவற்றால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களை ஊக்குவித்தவர்.
மாவட்ட ஆட்சியராகவும் பிற துறைகளில் பணிபுரிந்த சமயங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தடையின்றி கற்கவேண்டியதன் அவசியத்தை தனது பேச்சாலும், புத்தகங்களிலும் உணர்த்தி வந்தார். இந்திய ஆட்சி பணிக்காக, தான் படித்த காலத்தில் தேவையான புத்தகங்களோ, அனுபவத்தை சொல்லித்தர யாரும் இல்லை என்பதால், எப்போதும் மாணவர்களுக்காக தொலைக்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்குபெறுபவர்.
ஆட்சியராக இருந்தபோது, சிறைகளில் சிறைவாசிகளுக்கு தொழில்திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை அளிப்பதை உறுதிசெய்தார். மரம் நடுவதை அதிகமாக ஊக்குவித்தார். பள்ளிகள், மருத்துவமனைகள் என பொது இடங்களில் மரங்களை நடவேண்டும் என்றஆர்வத்தை தூண்டினார். நரிக்குறவர்களின் வாழ்க்கை மேம்பட வீடுகள் கட்டித்தரும் திட்டம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொண்டார். இயற்கை வளத்தை காப்பது, விவசாயிகள் நலன், மாணவர்கள் நலன் மற்றும் எல்லா துறைகளிலும் புதுமையை புகுத்துவது என பயணப்பட்ட இவர், எந்த துறைக்கு மாற்றப்பட்டாலும், தனக்கென வேலைகளை உருவாக்கிக்கொள்பவர்.
1995ல் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் தனி அலுவலராக செயல்பட்டு, அந்த மாநாட்டின் அழைப்பிதழ் தொடங்கி, நிகழ்ச்சிகளை செவ்வெனே நடத்தி மாநாட்டிற்காக வெளிநாட்டில் இருந்து வந்திருந்த சொற்பொழிவாளர்கள், தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தார்.
சுற்றுலாத்துறை வனத்துறை,சுற்றுசூழல்துறை, புள்ளியியல் துறை என பலதுறைகளில் பணியாற்றிவர், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறைத் தலைவராக செயல்பட்டுவந்தார்.
தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்த சைலேந்திர பாபு, அரசுப் பள்ளியில் தனது படிப்பை நிறைவு செய்தார். பின்னர் சில கலம் கேரள போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்துள்ளதாகவும் பேட்டி ஒன்றில் சைலேந்திர பாபு குறிப்பிட்டுள்ளார்.
விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயம் பயின்றுள்ளார். அங்கு படிக்கும்போதுதான் மத்திய அரசுப் பணியாளர் தேர்வினை எழுதி ஐ.பி.எஸ் ஆக தேர்வானார். . தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி நடத்தும் `பழைய மாணவர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்பது சைலேந்திர பாபுவின் வழக்கம். `தன்னுடைய ஐ.பி.எஸ் கனவுக்கு வேளாண் கல்லூரி எந்த வகையில் துணை நின்றது?’ என்பதையும் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது 25 வயதில் காவல்துறையில் ஐ.பி.எஸ் ஆக தேர்வானவர்.` ஐபிஎஸ் படிக்கவும், காவல்துறையின் மீது ஈடுபாடு வருவதற்கு பள்ளியில் என்.சி.சி கொடுத்த ஊக்கமும் ஒரு காரணம்’ என்கிறார் சைலேந்திர பாபு. உடற்பயிற்சி மீது தீராத காதல் கொண்ட சைலேந்திர பாபு தினமும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆரோக்கியமான உணவுகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது எப்படி என இணையத்தில் தினமும் இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.
எந்த உணவையும் சாப்பிடலாம். ஆனால், அளவோடு சாப்பிட வேண்டும். நாம் சாப்பிட்ட பிறகும் பசி இருக்க வேண்டும்’ என உணவு தொடர்பாக அறிவுரையும் வழங்குவார். தினமும் காலையில் மிக எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்வது இவரது வழக்கம்.
ஏ.எஸ்.பியாக பணியைத் தொடங்கி சிறப்பு அதிரடிப்படைத் தலைவர், காவல்துறை ஆணையாளர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர், கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி, ரயில்வே டி.ஜி.பி எனப் பல பதவிகளை அலங்கரித்த சைலேந்திர பாபு, தமிழகத்தின் 30 வது டி.ஜி.பியாக பதவியேற்க இருக்கிறார்.
[youtube-feed feed=1]