தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர், இவரது சகோதரர் வெ.திருப்புகழ் இந்த குடும்பத்தின் மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.

பல மைல் தூரம் சைக்கிளில் சென்று வேலைபார்த்த போதும், தன் இரு புதல்வர்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்கி, சேலத்துக்கு பெருமை சேர்த்த இவர்களது தந்தை வெங்கடாஜலம் தற்பொழுதும் சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனது பழமை மாறாத பாரம்பரிய வீட்டில் இயற்கைச் சூழலில் எளிமையாக வசித்து வருகிறார்.

தமிழ்மீது தீவிரப்பற்று கொண்ட அவர் தனது மகன்களுக்கு திருப்புகழ், இறையன்பு என்றும் மகள்களுக்கு பைங்கிளி, இன்சுவை என்றும் அழகிய தமிழ் பெயர்களாக வைத்ததோடு, கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்தவராய் தன் இரு மகன்களையும் ஐ.ஏ.எஸ். ஆக்கியதோடு தனது மகள்களையும் நன்கு படிக்கவைத்துள்ளார், இவரது மகள்களில் ஒருவர் சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

வெங்கடாஜலம் – திருப்புகழ் – இறையன்பு

 

இறையன்புவின் மூத்த சகோதரரான திருப்புகழ் தற்போது டெல்லியில் முக்கிய இலாக்காவை கவனிக்கும் அதிகாரியாக இருந்துவருகிறார்.

பேரிடர் மேலாண்மை பட்டம் பெற்ற ஒரே ஐ.ஏ.எஸ். அதிகாரியான திருப்புகழ், குஜராத் பூகம்பத்தின் போது அங்கு பணியாற்றியவர் என்பதும் மீட்புப் பணிகளை சிறப்பாக செய்து மக்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது இளைய சகோதரரான இறையன்பு ஐ.ஏ.எஸ். நேர்மையானவர், எளிமையானவர் மட்டுமல்லாமல் சுனாமி பேரழிவின் போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு திறமையானவர் என்ற பெயரையும் பெற்றவர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலா பள்ளிகளை துவக்கி அனைவரையும் கல்வி கற்க வைத்தவர். மிகச்சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர். இலக்கியவாதி, மனிதநேய பண்பாளர், 30 க்கும் மேற்ப்பட்ட நூல்களை எழுதிய நூலாசிரியர் என பலசிறப்புக்கள் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு உண்டு.

– ஈசன் எழில் விழியன்