டில்லி

னது சாபத்தால் ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே மரணமடைந்ததாக சாத்வி பிரக்ஞா தாகுர் தெரிவித்ததற்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மாலேகான் பகுதியில் வெடிகுண்டு வெடித்து ஆறு பேர் மரணமடைந்து 101 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடிகுண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளரை ஐபிஎஸ் அதிகாரியும் பயங்கரவாத எதிர்ப்புபடை அதிகாரியுமான ஹேமந்த் கர்கரே தேடி கண்டுபிடித்தார். அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளரான சாத்வி பிரக்ஞா தாகுர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே வருடம் மும்பையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் கடல் வழியாக உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். செப்டபர் மாதம் 26 இரவு தொடங்கிய இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் சுமார் 175 பேரை கொன்று குவித்தனர். இதைத் தவிர 900 பேர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகளில் 8 பேர் எதிர்தாக்குதலில் மரணம் அடைந்தனர்.

எஞ்சிய அஜ்மல் கசாப் பிடிபட்டு தூக்கு தண்டனை பெற்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தீவிரவாத தாக்குதலில் பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரி ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். அவருக்கு அசோக சக்கரா விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது தியாக செயலை பலரும் போற்றி வருகின்றனர்.

மாலேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ள சாத்வி பிரக்ஞா தாகுர் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். அவர், “நான் சிறையில் ஏராளமான கொடுமைகளை அனுபவித்தேன். அதற்கு என்னை கைது செய்த ஹேமந்த் கர்கரே தான் காரணமாவார். அதனால் நான் அவரை சபித்தேன்.

அவருடைய குடும்பமே அழிந்து போக வேண்டும் என சபித்தேன். அந்த சாபம் பலித்தது. அவருடைய கர்மவினையின் காரணமாக அதே வருடம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு ஹேமந்த் மரணம் அடைந்தார்” என தெரிவித்தார். சாத்வியின் கருத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

 

இது குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தனது டிவிட்டரில், “அசோக சக்கர விருது பெற்ற மறைந்த திரு ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளுடன் போராடி மகத்தான தியாகம் செய்துள்ளார். அவரை ஒரு வேட்பாளர் தனது அறிக்கைமூலம் அவமானம் செய்வதை நாங்கள் கண்டிக்கிறோம். நமக்காக உயிர் நீத்த தீயாகிகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என பதிந்துள்ளது.