சென்னை : கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனையை தடுக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஐபிஎல் சூதாட்டம் நடைபெற்று, சிஎஸ்கே அணி சில ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது அனைவரும் அறிந்தே. இந்த நிலையில், சமீப காலமாக ஐபிஎல் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதும், போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் போன்ற முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்று வரும் 17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னை உட்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெறும்போது, போட்டிகளை காண ரசிகர்கள் குவிவதால், கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் ஆன்லைன் மூலம் போலி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், அந்த பகுதியில் தீவிர ரோந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, ஐபிஎல் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்ற 12 பேரை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், ஐபிஎல் போட்டி நுழைவுச்சீட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதை தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுமீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், . புகாரை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் ஆணையிட்டுள்ளது.
மேலும், இதுபோன்று, டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பதாக மனுவில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பான ஐபிஎல் போட்டிகள் முடியும் தருவாயில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, முன்பே நீதிமன்றத்தை நாடியிருந்தால், நல்ல முடிவு எட்டியிருக்கும் என்று தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.