சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி,  ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ. 10 லட்சம் செலுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 2014-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் கூறியதாக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியோருக்கு எதிராக, நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை வழக்குரைஞர் ஆணையர் மூலம் சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு பதிவு செய்தது.

இதையடுத்து வழக்கு இன்று மீணடும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில்,  விவாத நிகழ்ச்சியின் பதிவை எழுத்து வடிவுக்கு மாற்றுவதற்கு கட்டணமாக ரூ. 10 லட்சம் செலுத்த தோனி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின்போது மேட்ச் பிக்சிங் எனப்படும் சூதாட்டம் நடைபெற்றது தெரிய வ்நதது. இந்த சூதாட்டத்தில் சிஎஸ்கே அணி, ராஜஸ்தான் ராயலஸ் அணிகள் இடம்பெற்றிருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுதது, இரு அணிகளும் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) சாதனைகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அணிகளில் ஒன்றாகும். எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற ஜாம்பவான்களுடன், அணி தொடர்ந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. ஆனால் களத்தில் அவர்களின் சாதனை இருந்தபோதிலும், சிஎஸ்கே ஒரு இருண்ட பகுதியைக் கடந்து சென்றது, இது உலகளவில் ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த நிகழ்வு குறித்த தொலைக்காட்சி விவாதங்களில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் சிஎஸ்கே அணி கேப்டனாக உள்ள தோனி மீது குற்றம் சாட்டியிருந்தார். இதை எதிர்த்து தோனி தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

[youtube-feed feed=1]