மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட விசாரணையில் இந்தி பட நடிகர் அர்பாஸ் கானுக்கு மகாராஷ்டிரா தானே போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

ஐபிஎல் 11வது சீசனில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சோனு ஜாலன் என்பவரை தானே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரபல இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சகோதரரும், இந்தி பட நடிகருமான அர்பாஸ் கானுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அர்பாஸ் கானிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு செய்தனர். அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணையில் அவருக்கு ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது உறுதி என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட அர்ப்பாஸ் கானுக்கு ரூ.2.8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜலானிடம் இருந்து அர்ப்பாஸூக்கு மிரட்டல் வந்துள்ளது. கடந்த மாதம் 16ம் தேதி டோம்பிவில் பகுதியில் உள்ள கட்டடத்தில் தானே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மேலும் 2 பேர் கைது செயண்யப்பட்டனர்.