சென்னை: ஐபிஎல் போட்டியின் இன்றைய போட்டி, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இதையொட்டி, அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், முதல் இரண்டு ஆட்டங்களில் சி.எஸ்.கே.அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. டந்த 22-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. 26-ந் தேதி நடைபெற்ற 2-வது போட்டியிலும் சி.எஸ்.கே. வெற்றி பெற்றது. குஜராத்தை 63 ரன்னில் தோற்கடித்தது. ஆனால், அதைத்தொடர்ந்த நடைபெற்ற போட்டிகளில் தோல்வியை சந்தித்து. சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று சென்னையில் 3வது ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைரடர்ஸ் அணியுடன் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த கோலாகலத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய போட்டியில், சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய போட்டியில், கடந்த போட்டியில் விளையாடாத முஸ்டாபிசுர் ரகுமான் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 2 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்சல், பில்சால்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், புதுமுக வீரர் ரகுவன்சி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், ஹர்திக் ரானா, வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் 28 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18-ல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10-ல வெற்றி பெற்றுள்ளன.
ஐ.பி.எல். போட்டியில் 7 லீக் ஆட்டம், குவாலிபையர்-2 மற்றும் இறுதிப்போட்டி ஆகிய 9 ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஐபிஎல் போட்டியை தொடர்ந்து, அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
.இந்த போக்குவரத்து மாற்றமானது இன்று ஏப்ரல் 8, ஏப்ரல் 23, ஏப்ரல் 28, மே 1, மே 24, மே 26 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை அதேபோல, மே 12ஆம் தேதி மத்தியம் 1 மணி முதல் இரவு 7 மணிவரை அமலில் இருக்கும். அதன் விவரங்கள் பின்வருமாறு..
1. விக்டோரியா ஹாஸ்டல் ரோடு கெனால் ரோடு – இந்த சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
2. பெல்ஸ் சாலை – இந்த சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, பாரதிசாலை பெல்ஸ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை X பெல்ஸ்சாலை சாந்திப்பிலிருந்து பெல்ஸ்சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ்சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
3. பாரதி சாலை – ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை பெல்ஸ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ்சாலை வழியாக வாலாஜாசாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். பாரதிசாலை பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
4. வாலாஜா சாலை – அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜாசாலை வரும் M.T.V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம். வாலாஜா சாலை x பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜா சாலை வரும் B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
5. காமராஜர் சாலை – போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் M.T.V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் வாகனங்கள் B & R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதிசாலை, பெல்ஸ் 60000 மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம். உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.
அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள்
1. அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜாசாலை வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
2.போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
3. காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக உட்புறச்சாலையில் செல்லலாம். PWD எதிராக உள்ள கடற்கரை உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.மேற்கண்ட மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.