ஐதராபாத்: ஐபிஎல்2022 போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 4 புதிய பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் கலந்துகொள்கின்றனர். இதுவரை 8அணிகள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், அடுத்த ஆண்டு 10 அணிகள் விளையாடுகிறது. 2022ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.  இதையடுத்து, ஐபிஎல் போட்டிகளில் ஆடும் போட்டியார்களுக்கான  மெகா ஏலம் வரும் பிப்ரவரி  மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அணி நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், தனது அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்து அறிவித்து உள்ளது.

அதன்படி,  பிரையன் லாராவை பேட்டிங் பயிற்சியாளராகவும், டேல் ஸ்டெயினை வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் சேர்க்கப்பட்டுள்ளதுடன்,  முத்தையா முரளிதரன் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமத் பதானி பீல்டிங் பயிற்சியாளராகவும்,  முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது பணியை தொடர்வார் என்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு  ஐ. பி.எல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி என்பது குறிப்பிடத்தக்கது.