ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Must read

துபாய்: 
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையே நடந்த ஐ.பி.எல். போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினார். வழக்கமாகச் சிறப்பான தொடக்கம் கொடுக்கும் இந்த ஜோடி இன்று ஏமாற்றியது. டு பிளிஸ்சிஸ் 10 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்னிலும் ஆட்டழிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 19 பந்தில் 19 ரன்களும், மொயீன் அலி 8 பந்தில் 5 ரன்களும் சேர்த்தனர். 5-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் ஜோடி சேர்ந்த தோனியின் நிதான ஆட்டத்தால்,  17 ஓவரில் சி.எஸ்.கே. 104 ரன்கள் எடுத்திருந்தது. அம்பதி ராயுடு 40 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்து வீச்சாளர்களில் அக்சர் படேல் 2  விக்கெட்களையும், அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
137 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 39  ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றி மூலம் 20 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஷார்ஜாவில் நாளை நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30  மணி தொடங்க உள்ளது.  

More articles

Latest article