சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 20ந்தேதி ஐபிஎல் கோப்பையை 4வது முறையாக வென்ற சிஎஸ்கே அணிக்கு வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை,  இந்தியா சிமெண்ட் மற்றும் ஐபிஎல் அணியின்  நிர்வாகி ஸ்ரீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.

2021 ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில், கொரோனா 2வது அலை காரணமாக, போட்டிகள் நிறுத்தப்பட்டு, பின்னர் துபாயில் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில், தோனி தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 4வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அக்டோபர் 15ந்தேதி அன்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.  இதனால் சிஎஸ்கே அணியினர் மட்டையுடன் களமிறங்கினார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், டூபிளெஸிஸ் ஆகியோர் களமிறங்கினர்.   ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் பின்னர் அதிரடிக்கு மாறினர்.

ருதுராஜ் 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இதன் பின்னர் களமிறங்கிய ராபின் உத்தப்பா, டூபிளெஸியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் சென்னை அணியின் ரன்கள் வேகமாக உயர்ந்தத. இறுதியில் சிஎஸ்கே அணி  20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.. அரைசதம் கடந்த டூபிளெஸிஸ் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர், 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் சென்னை அணியின் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டது. இதனால் சிஎஸ்கே வெற்றி கேள்விக்குறியாக மாறியது. இருந்தாலும், சிஎஸ்கே வீரர் சஹல் வீசிய பந்தில் முதல்விக்கெட் வீழ்ந்தது.அதைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் பந்துக்கு அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை அணியில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, ஹேசில்வுட் தாலா 2 விக்கெட்டுகளையும், சஹார், பிராவோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

சிஎஸ்கே-வின் வெற்றி உலகம் முழுவதும் உள்ள தமிழக ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து வெற்றிக்கோப்பையுடன் சென்னை திரும்பிய சிஎஸ்கே அணியினர், சென்னை  தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் கோப்பையை வைத்து பூஜை செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் சென்னை அணிக்கு விரைவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறும் என்றார்.

இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான பாராட்டு விழா வரும் 20ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிழை, முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் வழங்கினார.

சிஎஸ்கே வெற்றிக்கோப்பையை வென்றபோதே, சிஎஸ்கேவுக்கு பாராட்டு தெரிவித்த ஸ்டாலின், வெற்றியைக் கொண்டாட சென்னை  அன்புடன் காத்திருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், வெற்றிவிழாவுக்கான தேதி குறிக்கப்பட்டு உள்ளது.