சென்னை :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திலேயே ஐபிஎல் நடைபெற உள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல இருந்தது.

எனினும், பிசிசிஐ முடிவால் அந்த அணியின் பயணத் திட்டம் தாமதம் ஆனது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் பயிற்சி செய்ய அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் பயிற்சி 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது. அந்த தொடருக்கு முன்னதாக அதில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்க ஐபிஎல் அணிகள் முயன்று வருகின்றன. அதிலும் சிஎஸ்கே அணி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

சிஎஸ்கே பயண திட்டம் முதலில் ஐபிஎல் தொடர் அறிவிக்கப்பட்ட உடனேயே சிஎஸ்கே அணி முதல் அணியாக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல திட்டமிட்டது. ஆகஸ்ட் 8 அன்றே சென்னையில் இருந்து வீரர்களை திரட்டி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முடிவு செய்தது.

பிசிசிஐ முடிவு ஆனால், ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் பிசிசிஐ தங்கள் திட்டப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த பின் அனைத்து அணிகளும் ஆகஸ்ட் 20க்குப் பின் செல்லுமாறு அறிவுறுத்தியது.

தாமதமாக கிளம்ப உள்ளதா? மற்ற அணிகளுக்கு முன்பாக செல்ல நினைத்த சிஎஸ்கே அணி, தற்போது அவர்களை விட தாமதமாக கிளம்ப உள்ளதா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அது குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணி சென்னையிலேயே பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.

பயிற்சி முகாம் ஆம், சிஎஸ்கே அணி வீரர்கள் மார்ச் மாதம் சென்னையில் ஐபிஎல் பயிற்சி முகாமில் பங்கேற்று இருந்தனர். அப்போது லாக்டவுன் காரணமாக அந்த பயிற்சி முகாம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. தோனி உட்பட தங்கள் வீரர்கள் பலர் சர்வதேச போட்டிகளில் கடந்த ஆண்டில் ஆடவில்லை என்பதை சிஎஸ்கே நிர்வாகம் உணர்ந்தே அப்போது நீண்ட பயிற்சி முகாமை நடத்தியது.

ஆறு நாட்கள் பயிற்சி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகச் சில நாட்களே பயிற்சிக்கு கிடைக்கும் என்ற நிலையில் கூடுதலாக ஆறு நாட்கள் பயிற்சி செய்ய நினைத்த அந்த அணி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை பயிற்சி முகாம் நடத்த உள்ளது.

தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி இதற்காக மைதான நிர்வாகிகள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி வாங்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் அதில் பங்கேற்க உள்ளனர்.

தனி விமானம் தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா உட்பட அனைத்து வீரர்களும் தனி விமானத்தில் சென்னை வர உள்ளனர். ஆகஸ்ட் 14 அன்று அனைத்து வீரர்களும் இங்கே ஒரு ஹோட்டலில் கூட உள்ளனர்.

என்ன திட்டம்? வேறு எங்கும் செல்லாமல் மைதானத்துக்கு மட்டுமே வீரர்கள் செல்லும் வகையில் சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளது. மேலும், இதே முகாமில் வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனையும் நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.