டெல்லி

ந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2020-ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெறும் தேதி, இடத்தை பிசிசிஐ  அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள, 2020ம் ஆண்டுக்கான  ஐபிஎல் தொடரின் 13வது போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, போட்டியில் பங்குபெறும் வீரர்களின் ஏலம் நடைபெறும் இடம் தேதியை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் முதல் முறையாக கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. வரும்  டிசம்பர் மாதம் 19-ம் தேதி ஏலம் தொடங்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக, ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளும்  8 அணிகளின் நிர்வாகத்துக்கும் முறைப்படி ஐபிஎல் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. அடுத்த ஆண்டு ஏலத்துக்கு ஒட்டுமொத்தாக ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு அணியும் கடந்த ஆண்டு இருக்கும் இருப்புத்தொகையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.3 கோடி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  அதிகபட்சமாக டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் அதிகபட்சமாக ரூ.8.2 கோடியும், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.7.15 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ரூ.6.05 கோடியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ரூ.5.3 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.3.7 கோடியும் கையிருப்பு இருக்கிறது

இதுதவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.3.2 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.3.05 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் ரூ.1.8 கோடியும் இருப்பு இருக்கிறது என பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.