சென்னை:

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான தோனியை மீண்டும் சென்னை அணியே ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ.15 கோடி கொடுத்து அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தக்க வைத்துள்ளது. மேலும் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகியோரையும் சென்னை அணி தக்க வைத்துள்ளது.

கிரிக்கெட் முறைகேடு காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள்  தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த ஆண்டுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் களத்தில் இறங்குகிறது.

கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரான இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனை உரிமையாளராக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2015ல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ள  வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மற்றம் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா மற்றும் சுழல் பந்துவீச்சாளர்  ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தோனிக்கு ரூ.15 கோடி கொடுத்து தக்க வைத்திருப்பதாகவும், சுரேஷ் ரெய்னாவுக்கு 11 கோடியும், ஜடேஜாவுக்கு 7 கோடியும் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் மும்பை அணி ரோஹித் ஷர்மா, பும்ரா, பாண்ட்யா ஆகியோரையும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி விராட் கோலி, சர்பராஸ் கான், டி வில்லியர்ஸ் ஆகியோரையும் மற்ற அணிகளும் சில வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளன.

மற்ற வீரர்கள் ஏல முறையில் வரும் 27, 28-ம் தேதிகளில் தேர்வு செய்யப்படுவர் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு மீண்டும் களம் இறங்குவதால் ஐபிஎல் போட்டியை காண இப்போதே தமிழக ரசிகர்கள் விசில் அடித்து தயாராகி வருகிறார்கள்….