சென்னை: வெளிநாடு முதலீடு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று விமான நிலையத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது ரூ.15,516 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

தமிழக முதலீடுகளுக்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு 10 நாள் பயணமாக சென்றுவிட்டு இன்று காலை சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கடந்த ஒரு வாரமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் பயணம் மேற்கொண்டேன். மனநிறைவுடன் திரும்பியிருக்கிறேன். இந்த பயணத்தின்போது, மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். என் வெளிநாட்டு பயணங்களை பொறுக்க முடியாமல் சிலர் புலம்புகிறார்கள். 4 ஆண்டுகால பயணங்களுக்கு முத்தாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது என சொன்னால் மிகையாகாது. மத்திய அரசு எவ்வளவு புறக்கணித்தாலும் தமிழகம் முதலிடத்தை நோக்கியே செல்கிறது.
ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. வெளிநாடு பயணம் மாபெரும் வெற்றி பயணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை சென்னை திரும்பினார். சென்னை வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் ரூ.15,516 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டிற்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். மேலும் முதல்வருடன் தொழில், வர்த்தகம், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அதிகாரிகள் குழுவினரும் உடன் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.